கொரோனா நோயாளிகளை கண்டறிய திணறும் பி.எம்.சி.,| Dinamalar

'கொரோனா' நோயாளிகளை கண்டறிய திணறும் பி.எம்.சி.,

Added : மே 20, 2020
Share

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில், மருத்துவ பரிசோதனையில், 'கொரோனா' வைரஸ் தொற்று உறுதியான பின், நோயாளிகளை கண்டுபிடிக்க இயலாமல், மும்பை மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 37 ஆயிரத்து, 136 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை, 1,325 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியான பின், நோயாளிகளை கண்டுபிடிக்கும் பணி, மும்பை மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது. இதுகுறித்து, பி.எம்.சி., எனப்படும் பிருஹன் மும்பை மாநகராட்சியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரிசோதனையின்போது, மக்கள், தங்கள் சரியான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களை வழங்குவதில்லை.

இதனால், வைரஸ் தொற்று உறுதியான பின், அவர்களை கண்டுபிடிக்கும் பணி கடினமாக உள்ளது. தவறான முகவரி இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் அல்லது சொத்து ஆவணங்கள் மூலம் தொற்று இருப்போரை கண்டறிய முயற்சிக்கிறோம். கண்டறிய முடியாத நோயாளிகளில் பலர், குடிசைவாசிகள். இவர்கள், அச்சத்தின் காரணமாக, பொய்யான தொடர்பு விவரங்களை தருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X