அன்னூர்: ஓதிமலை ரோட்டில், பெரியம்மன் கோவில் மற்றும் மன்னீஸ்வரர் கோவில் அருகில், இரு மதுக்கடைகள் இருப்பதால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு உதவி
கருமத்தம்பட்டி: செம்மாண்டம்பாளையம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களை பாராட்டி உதவிகள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ., கந்தசாமி, ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்லூரி சார்பில் நிவாரணம்
அன்னூர்: குரும்பபாளையம், எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், அன்னூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள், 17 பேருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அமைச்சர் சார்பில் நிவாரணம்
அன்னூர்: பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், 118 பேருக்கு, அமைச்சர் வேலுமணி சார்பில், அரிசி, மளிகை உள்ளிட்ட, 15 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை, ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் சவுகத் அலி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர்.
பொதுமக்கள் சார்பில் நிவாரணம்
அன்னூர்: பேரூராட்சி அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பணியாற்றிய, துாய்மை பணியாளர்கள் 120 பேருக்கு, 9வது வார்டு, குமரன் நகர், பொதுமக்கள் சார்பில், பரிசு வழங்கப்பட்டது.
குழாய் பதிப்பு வேகப்படுத்தணும்
அன்னூர்: அன்னூர் நகரில், திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்கான, ராட்ஷச குழாய்கள் பதிக்கும் பணி மெதுவாக நடப்பதால், நகரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, புழுதிப்புயல் உருவாகிறது. பணியை வேகப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீசாருக்கு சிக்கன் பிரியாணி
சிங்காநல்லுார்: ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட, வடமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு, சிங்காநல்லுார் போலீசார் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். இதனை பாராட்டி, சவுரிபாளையம் அ.தி.மு.க., பகுதி கழக துணை செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியினர், நேற்று சிங்காநல்லுார் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து என, 80க்கும் மேற்பட்ட போலீசாருக்கு, சிக்கன் பிரியாணி, முட்டையுடன் மதிய உணவு வழங்கினர்.
தாசபளஞ்சிக மகாஜன சங்கம் உதவி
காரமடை: காரமடை தாசபளஞ்சிக மகாஜன சங்கத்தின் அறக்கட்டளை மற்றும் இளைஞர் சங்கத்தின் சார்பில், ஊரடங்கு அமல் ஆன நாளிலிருந்து, காரமடை பகுதியில் உள்ள ஆதரவற்றவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். இறுதி நாளில், 120 குடும்பங்களுக்கு, 1000 ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை, எம்.எல்.ஏ., சின்னராஜ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
சலூன் உரிமையாளர்களுக்கு உதவி
சிறுமுகை: காரமடை ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள, சலூன் கடைக்காரர்கள் ஊரடங்கால் வேலை இழந்து தவித்தனர். இவர்களுக்கு, ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, தமது சொந்த செலவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 750 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, சமையல் ஆயில், மளிகைப் பொருட்கள் அடங்கிய, நிவாரண பொருட்களை வழங்கினார்.
சலுான் கடை திறக்க வேண்டுகோள்
கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடை நேரத்தை நீட்டிப்பு செய்ததை போல், முடி திருத்தும் சலுான் கடைகளை மாநகராட்சிப்பகுதிகளில், திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க.,வினர் உதவி
சிறுமுகை: காரமடை கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் இலுப்பநத்தம், இரும்பறை ஊராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி அடங்கிய பேக்குகளை, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாண சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.
வின்சென்ட் தே-பவுல் சபை உதவி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில் உள்ள வின்சென்ட் தே பவுல் சபையினர், தத்து குடும்பங்களுக்கும், ஏழை, எளிய குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உட்பட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
வி.எச்.பி., பாராட்டு
சூலுார்: மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பாராட்டு தெரிவித் துள்ளது. தமிழ்நாடு வி.இ.ப., கோவை மண்டல தலைவர் வக்கீல் விஜயகுமார் தலைமையில், செயற்குழு கூட்டம்நடந்தது. மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சூலூர் ஒன்றிய தலைவராக கோவிந்தராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE