சென்னை : 'சென்னை, வேலுார் மற்றும் திருத்தணி ஆகிய, மூன்று நகரங்களில், வெயில் உச்சகட்டத்தை எட்டியது. இன்றும், நாளையும் உச்சபட்ச வெயில் நீடிக்கும்' என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகாவை ஒட்டிய நிலப் பகுதிகளிலும், அரபி கடல் மற்றும் வங்க கடலிலும் இருந்த, ஈரப்பதமான காற்றை, 'அம்பான்' புயல், முழுவதுமாக இழுத்து சென்று விட்டது. அதனால், தென் மாநிலங்களில் கடும் வெப்பமும், அனல் காற்றும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று வெப்பத்தின் அளவு கடுமையாக அதிகரித்தது. பகலில் மக்களால் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் வீசியது. மாலையில் கடல் காற்றும் வீசாமல், தொடர்ந்து வெப்பம் நீடித்தது.
இது தொடர்பாக, வானிலை மையம் கூறியுள்ளதாவது:சென்னையில் உச்சகட்டமாக நேற்று, 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தியுள்ளது. வேலுார் மற்றும் திருத்தணியிலும், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் தகித்தது. இந்த உச்சபட்ச வெயில், இன்றும், நாளையும், சென்னையில் நீடிக்கும். அதிகபட்சமாக, 41 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சமாக, 30 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும். அதாவது, காலையில் சூரியன் உதிக்கும்போதே, சென்னையின் வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம், அதிகமாக இருக்கும்; வறண்ட வானிலை நிலவும். மற்ற மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE