எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கொரோனா குறித்த பீதி வேண்டாம் : சிகிச்சை விதிமுறையில் வந்தது மாற்றம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா குறித்த பீதி வேண்டாம் : சிகிச்சை விதிமுறையில் வந்தது மாற்றம்

சென்னை : கொரோனா நோய் தாக்குதல் குறித்து, மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. சரியான மருந்து உட்கொண்டால் மீண்டு விடலாம். சிகிச்சை விதிமுறைகளிலும், அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், அடங்காமல், அதிகரித்தபடி உள்ளது. அதற்காக, மக்கள் பீதி அடைய தேவையில்லை. நோய் அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் வேண்டாம். நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அலோபதி மற்றும் சித்தா கூட்டு மருத்துவ சிகிச்சையால், விரைவில் குணமடையலாம். இத்தகைய சிகிச்சை முறைக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், கொரோனாவை விரட்டி விடலாம்.


வீட்டிலேயே இருக்கலாம்


நோய் தொற்று உறுதியாகி, மருத்துவமனைக்கு சென்றால், விரைவில் நோயில் இருந்து மீண்டு விடலாம். அறிகுறி இல்லாமல், நோய் தொற்று உறுதியானால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இருந்தால், மருத்துவ அலுவலர்கள் ஆலோசனை பெற்று, வீட்டில் இருக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், பத்து நாட்களில் வீடு திரும்பலாம். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்வது போன்றவற்றை கடைப்பிடித்தால், நோயை தவிர்க்கலாம். கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிப்பது; அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிவது; நோய் தொற்று ஏற்பட்ட பகுதியை, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பது; வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, பரிசோதனை நடத்துவது தொடர்பாக, வழிகாட்டு முறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.



சில மாற்றங்கள்



அவற்றில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அரசாணை, சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்:ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்வோருக்கு, கொரோனா நோய் அறிகுறி இருந்தால், பரிசோதனை நடத்த வேண்டும். அறிகுறி இல்லையென்றால், அவர்களை, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தினால் போதும்.வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும், சோதனை நடத்த வேண்டும். நோய் தொற்று இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். நோய் தொற்று இல்லையெனில், வீடு அல்லது முகாமில், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

நோய் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை, பரிசோதனை முடிவு வந்ததிலிருந்து, 14 நாட்கள் கழித்து, வீட்டிற்கு அனுப்பலாம். பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாக, காய்ச்சல் இல்லையென்றாலும், வீட்டுக்கு அனுப்பலாம். வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டோருக்கு, மீண்டும் பரிசோதனை தேவையில்லை.


வெளியில் நடமாடலாம்



அதேபோல், நோய் கட்டுப்பாட்டு பகுதியை தளர்த்துவதிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு, நோய் தொற்று, 28 நாட்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தால் தான், நோய் கட்டுப்பாட்டு பகுதி தளர்த்தப்பட்டது. தற்போது, கடைசியாக நோய் தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து, 14 நாட்கள் போதும்; அந்த பகுதியை தளர்த்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கலாம்.இவ்வாறு, புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



உயிரழிப்பை தடுக்க என்ன வழி?



இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:

கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர், புற்றுநோய், கடுமையான நீரிழிவு நோய், கட்டுக்குள் இல்லாத ரத்த அழுத்தம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், நாள்பட்ட நோயுடன் போராடி வருபவர்கள் தான் உயிரிழந்து வருகின்றனர். இவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான் முக்கிய காரணம்.


தயக்கமின்றி வாருங்கள்


மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சளி போன்ற பிரச்னைகள் இருக்கலாம். அவர்கள், கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வதும் முக்கிய காரணம். கொரோனா, உடலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவை குறைத்து விடுகிறது. இது, முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு விரைவாக குறைகிறது.

குறிப்பாக, ஒரு மனிதனுக்கு, 97 - 100 சதவீதம் அளவில், ஆக்ஸிஜன் உடலுக்கு செல்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு, ஆக்ஸிஜன் அளவு, 70 சதவீதமாக குறைய ஆரம்பித்து விடுகிறது. இதனால், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், ஏற்கெனவே பாதிப்பு உள்ள நோய் காரணமாக, அதிகளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.அரசு மருத்துவமனைகளின் உயர் தர சிகிச்சையில், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், கொரோனாவில் இருந்து, குணமடைந்து வருகின்றனர்.

எனவே, சாதாரண சளி, காய்ச்சல் போன்றவை இருந்தால், தாமதிக்காமல், டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெற வேண்டும். அப்போது, உயிரிழப்புகளை தடுக்கலாம்.




வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்



கொரோனாவால் பாதிக்கப்படும் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 12 வயதுக்கு மேல், 60 வயதுக்கு உட்பட்டவர்கள், வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். வீட்டில், சிகிச்சை பெறும்போது, 'பிங்கர் பல்ஸ் மீட்டர்' பயன்படுத்தி, தினமும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.


அலட்சியம் வேண்டாம்



சித்தா மருத்துவ துறை டாக்டர் வீரபாபு கூறியதாவது:முதியவர்கள், நீரிழிவு, ரத்தம் அழுத்தம் உள்ளிட்ட, நாள்பட்ட நோய்களுடன் போராடி வருபவர்கள், கவனமாக இருக்க வேண்டும். வழக்கமான மாத்திரைகளுடன், டாக்டர்களின் ஆலோசனையுடன், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரகைள், கப சுர குடிநீர் போன்றவற்றை குடிப்பது நல்லது. சிறு சிறு பிரச்னை என்றாலும், டாக்டர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்; அலட்சியம் வேண்டாம்.

இதுபோன்ற நோயாளிகளுக்கு, தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கலாம். அவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதன் வாயிலாக, நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு, அதன் அளவை குறைக்கும் வகையிலான மூலிகை கஷாயத்தை, அலோபதி மருத்துவத்துடன் இணைந்து அளிப்பதன் வாயிலாக, அவர்களை குணப்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
21-மே-202007:29:22 IST Report Abuse
J.Isaac எல்லாமே அனுமானந்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X