பொங்கலுார்:பி.ஏ.பி., வாய்க்காலில் இறந்தகோழிகளைக் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உடுமலை, பொங்கலுார் பகுதிகளில் ஏராளமான பிராய்லர் கோழி பண்ணைகள் செயல்படுகின்றன. தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக, கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. நோய் தாக்கி இறந்த கோழிகளை ஆழமாக குழிதோண்டி பாதுகாப்பான முறையில் புதைக்க வேண்டும். இதனால், சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுவதுடன் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.குழி தோண்டுவதற்கு குறைந்த செலவே ஆகும். ஆனால், சில பண்ணையாளர்கள், இறந்த கோழிகளை, பி.ஏ.பி., வாய்க்காலில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர். இவை பல்வேறு கிளை வாய்க்கால்கள் வழியாக மூலை முடுக்கெல்லாம் செல்கின்றன.வாய்க்காலில் மிதந்து வரும் கோழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக, வீடு, தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. ஒரு சில கோழிப்பண்ணையாளர்களின் இந்த பொறுப்பற்ற செயலால், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுகிறது என்ற வதந்தி காரணமாக கோழி பண்ணையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கஷ்டத்தில் இருந்து மெதுவாக மீண்டு வரும் அவர்கள் நோய் பரவும் என்பது தெரிந்திருந்தும் மீண்டும் பொறுப்பற்ற முறையில் நீர்நிலைகளில் இறந்த கோழிகளை கொட்டுகின்றனர். இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE