திருப்பூர்:பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க வருவோர், மதுபாட்டில்களை உடைத்து வீசுவதால், பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ஊரடங்கு நேரத்திலும், விவசாய பணிகளுக்கு தடையில்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், பி.ஏ.பி., தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் முடங்கியிருக்கும் இளைஞர்கள், வாய்க்காலில் குளிக்க புறப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது, மது, சிக்கன், மட்டன் வறுவல் வாங்கி வந்து, விளை நிலங்களில் அசுத்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கூறியதாவது:பி.ஏ.பி., வாய்க்காலில், குப்பிச்சிபாளையம், நல்லகாளிபாளையம் வழியாக, முத்தணம்பாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் வழங்கப்படுகிறது. குளிக்க வரும் நபர்கள், அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.தோட்டத்தில் உள்ள தேங்காய் திருடப்படுகிறது; மதுபாட்டில், சிக்கன், மட்டன் வறுவலுடன் வந்து, தோட்டத்தில் மதுக்குடிக்கின்றனர். பாட்டில்களை உடைத்து அட்டூழியம் செய்கின்றனர்.வேளாண் பணிக்கு செல்லும் விவசாயிகளின் காலில் குத்தி, காயம் ஏற்படுகிறது. விவசாயிகள் கேட்டால், கும்பல் தகராறு செய்கிறது.எனவே, பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்க, துணி துவைக்க தடை செய்ய வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் வரும் போது, முறையாக கண்காணிக்க வேண்டுமென, கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE