உடுமலை:உடுமலை நகராட்சியில், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும், நுண் உரக்குடில்கள் மூன்றிலும், இயந்திரங்கள் பழுதால் பணிகள் முடங்கியுள்ளன.உடுமலை நகராட்சியில், 17,800 வீடுகள், 1,038 வணிக நிறுவனங்களிலிருந்து, நாள் தோறும், 26 டன் குப்பை சேகரமாகிறது. துாய்மை பணியாளர்கள் மூலம், வீடுகள் தோறும் நேரடியாக, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுகிறது.இதில், 12 டன் மக்கும் குப்பை, கணபதிபாளையம் உரக்கிடங்கு, மாட்டுத்தொழுவம் மற்றும் சந்தை வளாகத்திலுள்ள, நுண் உரக்குடில்கள் மூலம், இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது.உரக்குடில்களில், மக்கும் குப்பை, உலர வைக்கப்பட்டு, 'கன்வேயர் பெல்ட்' உடன் கூடிய இயந்திரத்தின் மூலம் குப்பை அரைக்கப்பட்டு, துாளாக்கப்படுகிறது.பின்னர், இதற்காக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டு, உயிர்க்கரைசலான இ.எம்., கரைசல் ஊற்றி, 40 நாட்களில் உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொரு உரக்குடில்களிலும், நாள் ஒன்றுக்கு, 4 டன் வீதம், தினமும், 12 டன் குப்பை உரமாக மாற்றப்பட்டு வந்தது. இயற்கை உரமாக இருந்ததால், ஆர்வமாக விவசாயிகளும் வாங்கிச்சென்றனர்.இந்நிலையில், நுண் உரக்குடில்களிலுள்ள இயந்திரங்கள், சுழலும் சக்கரங்கள் பழுது உள்ளிட்ட காரணங்களினால், மூன்று நுண் உரக்குடில்களும், செயல்படாமல், பல வாரமாக மூடப்பட்டுள்ளது.இதனால், மீண்டும் குப்பை பழைய உரக்கிடங்கிற்கே செல்கிறது. ஒவ்வொரு நுண் உரக்குடில்களும், தலா, 40 லட்சம் ரூபாய் என, 1.20 கோடி ரூபாய் செலவழித்து, அமைக்கப்பட்ட நுண் உரக்குடில்கள் முழுமையாக இயங்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று நுண் உரக்குடில்களிலும், இயந்திரங்கள் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக, பழுது நீக்கும் பணி தாமதமாகியது. நகர பகுதிகளில் சேகரமாகும் குப்பை, கணபதிபாளையம் உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று, 3 அடி உயரம், 4 அடி உயரத்தில், குவித்து வைத்து, இ.எம்., கரைசல் ஊற்றி, உரமாக மாற்றும் பணி நடக்கிறது. விரைவில், நுண் உரக்குடில்களில், குப்பை அரவை, உரம் தயாரிக்கும் பணி துவங்கும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE