வாஷிங்டன் : கொரோனா பரவலால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமானதை அடுத்து, இந்தியாவில், 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
இது குறித்து, அமெரிக்காவின் ஆய்வு அமைப்பான, சி.ஆர்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தாக்கத்தால், உலகளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இதன் காரணமாக, ஆசியாவில், வளரும் நாடுகளில் இருந்து, 1.95 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதில், இந்தியாவில் இருந்து, 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கொரோனாவால், முன்னேறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், ஆசியாவில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரம் மட்டும் மிகச் சிறிய அளவிற்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகள், ஒருபுறம் கொரோனா பரவலை தடுக்கவும், மறுபுறம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் போராடி வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், கொள்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து, ஒவ்வொரு நாடும் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்குகின்றன. இந்த மாறுபாடு காரணமாக, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையிலும், ஐரோப்பாவில், வடக்கு மற்றும் தெற்கு நாடுகள் இடையேயும், கொள்கை ரீதியான மோதல்கள் எழும். உதாரணத்திற்கு, ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்துக்கு, அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், விமான சேவை நிறுவனங்களுக்கு, 8.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு உண்டாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பல விமான சேவை நிறுவனங்கள் திவாலாகும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்நாட்டு பொருட்களின் இறக்குமதியை சார்ந்துள்ள நாடுகளிலும், உற்பத்தி பாதிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஏமாற்றம் அளிக்கிறதுசுங்க வரி உயர்வு தொடர்பாக, அமெரிக்கா - சீனா இடையே, 22 மாதங்களாக நடைபெற்று வந்த வர்த்தகப் போர், இந்தாண்டு, ஜனவரியில் முடிவடைந்தது. அமெரிக்காவிடம் இருந்து, கூடுதலாக, 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு பொருட்களை இறக்குமதி செய்ய, சீனா ஒப்புக் கொண்டது.
இதையடுத்து இரு நாடுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை, வரலாற்று சிறப்பு மிக்கது என, டிரம்ப் பாராட்டியிருந்தார். கொரோனா பரவலுக்குப் பின், இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நினைப்பதாக, டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவால், உலக நாடுகள் பலவற்றில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அதை செய்யாதது, ஏமாற்றம் அளித்துள்ளதாக, டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE