இந்தியா

புதுச்சேரி, காரைக்காலில் காற்று மாசு குறைவு. ஊரடங்கு கால ஆய்வில் தகவல்

Added : மே 21, 2020
Share
Advertisement
புதுச்சேரி, காரைக்காலில் காற்று மாசு குறைவு. ஊரடங்கு கால ஆய்வில் தகவல்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காற்றில் கலக்கும் மாசுக்கள் தொடர்பாகவும், காற்றின் தரம் குறித்தும், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டி தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரியில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள சுய்ப்ரேன் வீதி (குடியிருப்பு பகுதி), அண்ணா நகர் (குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி), மேட்டுப்பாளையம் (தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி) ஆகிய இடங்களில், காற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.காரைக்காலில் நேரு நகர், கோவில்பத்து, போலகம் ஆகிய இடங்களில் காற்றின் தன்மை குறித்து மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.ஆய்வில் கிடைக்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டு, ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி துவங்கிய ஊரடங்கு, மே மாதத்திலும் நீடித்தாலும், ஏப்ரல் மாதம் முழுவதும் தளர்வுகள் எதுவும் இல்லாமல் கடுமையாக பின்பற்றப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் காற்றின் தரம் குறித்து, ஏப்ரல் மாதம் முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வழக்கமான 3 இடங்களில் காற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

இதில், காற்றில் கலக்கும் மாசுக்கள் பெருமளவில் குறைந்துள்ளது தெரிய வந்தது. காற்றில் கண்ணுக்கு தெரியாத நுண்துகள்கள் ஏராளமாக மிதப்பது வழக்கம். காற்றின் தரத்தை நிர்ணயிப்பதில் நுண் நுகள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் காற்றில் நுண் துகள்களின் அளவு 43 சதவீதத்தில் இருந்து, 65 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற ரசாயனங்களின் அளவும் பெரிதும் குறைந்துள்ளது.அதாவது, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சதுர மீட்டரில் 5.4 மைக்ரோ கிராம் சல்பர் டை ஆக்சைடும், 49 மைக்ரோ கிராம் அளவிற்கு நைட்ரஜன் டை ஆக்சைடும் கலந்திருந்தது.தற்போதைய ஊரடங்கு கால ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், சல்பர் டை ஆக்சைடின் அளவு 2.1 மைக்ரோ கிராம், நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு 5.2 மைக்ரோ கிராம் என, காற்றில் ரசாயனங்களின் கலப்பு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் தேவை!ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் முடங்கியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது, வாகன போக்குவரத்து முடங்கியது, தொழிற்சாலைகள் மூடப்பட்டது, கட்டுமானப் பணிகள் தடைபட்டது போன்றவையே காற்றில் மாசு குறைந்ததற்கு முக்கிய காரணங்களாகும்.ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், காற்றில் மாசுக்களின் அளவு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. துாய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை மக்கள் உணர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X