திருவள்ளூர் : 'திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்ட, எட்டு சிறப்பு ரயில்களில், இதுவரை, 8,000 வட மாநிலத்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்' என, கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், செங்கல் சூளைகளில், வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். ஊரடங்கு உத்தரவால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.மத்திய, மாநில அரசின் அனுமதி அளித்ததையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக சிறப்பு ரயில் மூலம், அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த, 2,864 பேர் நேற்று, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரயில் மூலம் சென்றனர். கலெக்டர் மகேஸ்வரி, அனைவருக்கும் உணவு, பிஸ்கெட் வழங்கி, வழியனுப்பி வைத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்காலிக தங்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தினமும் உணவு அளிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ''இதுவரை, எட்டு சிறப்பு ரயில்களில், 8,000 பேர், ஒடிசா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE