விவசாயமா... மீன்பிடி தொழிலா? நீர்நிலைகளில் வீணாக்கப்படும் தண்ணீர்: | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயமா... மீன்பிடி தொழிலா? நீர்நிலைகளில் வீணாக்கப்படும் தண்ணீர்:

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
விவசாயம், மீன்பிடி தொழில், நீர்நிலை, தண்ணீர், விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள், மோதல், பொதுப்பணித்துறை

சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகளில், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, மீன் பிடிக்கும் பணியில், அவற்றை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் களம் இறங்கியுள்ளனர். தண்ணீர் வீணாக வெளியேற்றப்படுவதற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை, 2018ல் பொய்த்தது. இதனால், கடந்தாண்டு சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டு, ஒரு குடம் தண்ணீருக்கே, மக்கள் அவதிப்படும் நிலை உருவானது. நிலைமையை சமாளிக்க, கல் குவாரிகள், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீராணம் ஏரியில் இருந்து நீர் பெறப்பட்டு, சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசை நம்பிடாமல், எதிர்கால தேவைக்காக, நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, மக்கள் முன்வர வலியுறுத்தி, நம் நாளிதழில், தொடர் செய்திகள் வெளியாகின.

இதன்பின், தமிழகம் முழுதும், பல இடங்களில் நீர்நிலைகள், அந்தந்த பகுதி மக்களால், துார் வாரி ஆழப்படுத்தப்பட்டன.அதற்கேற்ப, கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையும் ஓரளவு கைகொடுத்ததால், பல இடங்களில், நீர்நிலைகள் நிரம்பின. இதனால், நடப்பாண்டில் விளைச்சல் அமோகமாக நடந்து வருகிறது. முதல் போக விளைச்சலை முடித்துள்ள விவசாயிகள் பலர், இரண்டாம் போகத்திற்கு தயாராகி வருகின்றனர்.அவர்களுக்கு, ஏரிகளில் மீன் பிடிக்க பொதுப்பணித்துறையால், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

புறநகர் விவசாயிகள் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஏரிகளில் மீன் பிடித் தொழில் செய்ய, பொதுப்பணித்துறை ஒப்பந்தம் விட்டுள்ளது.இதை, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் அவர்களின் ஆதரவு பெற்ற தனியார் பலர் ஒப்பந்தம் எடுத்துள்ளனர்.அவர்களுக்கு, நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிய பின் தான், மீன்பிடிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளன. அதே நேரம், கொரோனா வைரஸ் பிரச்னை மற்றும் மீன்பிடித் தடைகாலம் அமலில் உள்ள நிலையில், தற்போது, ஏரி மீன்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தேவை அதிகரிப்பால், மீன்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுபணித்துறையின் உத்தரவை மீறி, மீன் விற்பனையில் கொள்ளை லாபம் பார்க்க, ஏரிகளில் உள்ள நீரை, முறைகேடாக வெளியேற்றி, மீன் பிடிக்க, ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனால், பல இடங்களில், 'விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும்; தண்ணீரை வெளியேற்றி, மீன் பிடிக்க அனுமதி தரக்கூடாது' என, விவசாயிகளும், மீன் பிடிக்க ஏரிகளில் உள்ள, தண்ணீரை வெளியேற்ற அனுமதி தர வேண்டும் என, ஒப்பந்ததாரர்களும், மாறி மாறி அதிகாரிகளை நச்சரிக்க துவங்கியுள்ளனர்.

பல இடங்களில், ஒப்பந்ததாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே, மோதலும் நடக்கிறது. கரைவேட்டிகள் தலையீடால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல், விழிபிதுங்கி நிற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, விவசாயத்திற்கு நீரை பயன்படுத்தவும், ஏரிகளில் நீர் வற்றிய பின், மீன் பிடிக்க அனுமதி அளிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரியில் நீரை வெளியேற்றி, மீன் பிடிப்பது தவறு. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 'சில இடங்களில், அரசியல் தலையீடு காரணமாக, அப்படி நடக்கிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான், இதற்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.


மோட்டார் பயன்படுத்தலாமா?

ஏரிகளில் உள்ள நீரை, மதகுகள் வழியாகவே, விவசாய நிலங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு மதகுகள் வழியாக நீர் செல்ல முடியாத அளவிற்கு, நீர்மட்டம் குறைந்த பிறகே, மீன்பிடி தொழிலை துவங்க வேண்டும். ஆனால், மீன் பிடிக்க ஏலம் எடுத்தவர்கள், மோட்டார் வைத்து, ஏரிகளில் உள்ள நீரை, கால்வாய் மற்றும் காலி நிலங்களில் விட்டு, வீணாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X