திருச்சி: மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு, நர்ஸ் போட்ட தடுப்பூசி, உடைந்து, 70 நாட்களுக்கு பின், அகற்றப்பட்டது.
கரூர், தோகைமலை அருகே, தெலுங்கபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பிச்சாண்டவர்; மனைவி தாமரைச் செல்வி. இவருக்கு, மார்ச், 9ல், மணப்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மறுநாள், குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீடு திரும்பியதும், குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துள்ளது. நேற்று காலையும், காய்ச்சல் அடித்ததுடன், குழந்தை தொடர்ந்து அழுதது. பெற்றோர் பரிசோதித்து பார்த்தபோது, குழந்தையின் தொடையில், தடுப்பூசி போட்ட இடம், 'சீழ்' வைத்து இருந்ததும், அதில் சிறிய ஊசி நீட்டியபடி இருந்ததும் தெரிந்தது. சிறிது அமுக்கியதும், ஊசி வெளியே வந்துள்ளது. அது, முதலில் தடுப்பூசி போட்டபோது, உடைந்த ஊசி என்பது தெரிந்தது. மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற குழந்தையின் பெற்றோர், குழந்தையையும், ஊசியையும் காட்டி நடந்ததை கூறி உள்ளனர். அஜாக்கிரதையாக நடந்து கொண்ட நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க, உதவி மருத்துவ அலுவலர் வில்லியம் ஆண்ட்ரூசிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, குழந்தையை மேல் சிகிச்சைக்காக, திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று குழந்தையின் தொடையில் இருந்த, உடைந்த தடுப்பூசி அகற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE