வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்பதே சீனாவின் ஆசையாகவுள்ளது' என, சீனாவை மீண்டும் விமர்சித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

உலகிலேயே கொரோனாவின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 15.92 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 94,994 பேர் உயிரிழந்துள்ளனர். 'கொரோனாவால் மொத்த உலகமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருப்பதற்கு சீனா மட்டுமே காரணம்' என, ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், 'சீனாவின் செய்தி தொடர்பாளர்கள் அந்நாடு சார்பாக மிகவும் முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். சீனாவால் உலகம் முழுவதும் பரவியிருக்கும் வேதனைகளையும் உயிரிழப்புகளையும் திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த வைரசை பரவ விடாமல் அவர்களால் எளிதில் தடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு அவர்கள் செய்யவில்லை' என, கருத்து பதிவிட்டிருந்தார் டிரம்ப்.
China is on a massive disinformation campaign because they are desperate to have Sleepy Joe Biden win the presidential race so they can continue to rip-off the United States, as they have done for decades, until I came along!
— Donald J. Trump (@realDonaldTrump) May 21, 2020

இந்நிலையில் இன்று, 'அமெரிக்க அதிபர் தேர்தலில், தூங்கி வழியும் ஜோ பிடன் தான் வெற்றி பெற வேண்டும் என, சீனா ஆசைப்படுகிறது. அதற்காக, சீனா ஒரு பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவை அவர்களால் எளிதில் துண்டிக்க முடியும். நான் பதவிக்கு வருவதற்கு முன்பிலிருந்து பல ஆண்டுகளாக சீனா இதைத்தான் செய்து வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், டிரம்ப் மற்றும் சீனாவுக்கு இடையேயான பனிப்போர் முடிவடைந்து, வெளிப்படையான வார்த்தைப் போர் உச்சத்தை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE