செங்குன்றம்: அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக, அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, செங்குன்றம் காமராஜ் நகர், ஜி.என்.டி., சாலை, திருவள்ளூர் கூட்டுச்சாலை, பாடியநல்லுார் மகாலட்சுமி நகர் சுற்றுவட்டாரங்களில், சில தினங்களாக, மதிய நேரத்தில், இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்கிறது.இதனால், பொதுமக்கள், கடும் வெயில் காரணமாக அவதியடைந்தனர். அவர்கள், செங்குன்றம் மின் வாரிய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டால், அவர்கள் அழைப்பை ஏற்பதில்லை.
இதனால், மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த, பொதுமக்கள், 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும், அங்கு இல்லை.அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, யாரும் வரவில்லை என்றனர். அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள், அவர்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்..
பொதுமக்கள் கூறியதாவது:மின் தடை பிரச்னை குறித்து, இந்த அலுவலக தொலைபேசி மற்றும் அதிகாரிகளின் போனுக்கு, புகார் செய்ய, தொடர்பு கொண்டால், இங்குள்ள அதிகாரிகள், எங்களது அழைப்பை ஏற்பதில்லை. மின் இணைப்பு துண்டிப்பு போன்ற, அவசர உதவிக்காக, தொடர்பு கொண்டாலும், அதே அலட்சியம் தான் நீடிக்கிறது. இதனால் மின் விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு.இவ்வாறு, மக்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE