சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வேண்டவே வேண்டாம் இலவசம்!

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேண்டவே வேண்டாம் இலவசம்!

வே.பழனி, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' வைரஸ், நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது என்பது, அனைவருக்கும் தெரியும். எனவே, இனிமேலாவது விழித்துக்கொண்டு, தமிழகத்தில், தேவையற்ற இலவசங்களை வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும், அத்தியாவசிய தேவை, இலவசமாக வழங்க வேண்டும். அதற்கு, வருவாய் துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும்; ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே, அப்படி ஒரு நிலை இல்லை.இந்த இக்கட்டான நேரத்தில், மக்களுக்கு உதவாத கட்சிகள், தேர்தல் வந்ததும், ஓட்டுக்காக, வீடுகள்தோறும் சென்று, பணப்பட்டுவாடா செய்யும். அதாவது, மக்களின் தேவைக்கு திறக்காத, அவர்களின் கஜானா, அவர்களின் சுய லாபத்திற்காக மட்டும் திறக்கும்.அந்த அரசியல்வாதிகளையும் திருத்த முடியாது; இந்த மக்களும் திருந்தவே மாட்டார்கள். ஆனால், அரசின் திட்டங்களை மட்டும், இரு தரப்பும் விமர்சனம் செய்யும்.
வருமான வரி சோதனையை, தீவிரப்படுத்தினால், தமிழகத்தில் மட்டும், பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, பறிமுதல் செய்யலாம். அது, கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை ஓரளவு சரி செய்யும்.ஆட்சியாளர்களே... 'டிவி' முதல் மடிக்கணினி வரை, பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இனி, உணவு பொருட்களை தவிர, மற்ற இலவசங்கள் வேண்டாம்.

கடவுளை தரிசிக்கக் கூடாதா?

டி.ரமேஷ்பாபு, தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, கண்ணுக்கு தெரியாத, ொரோனா வைரசுடன், யுத்தம் செய்து வருகிறோம். ஊரடங்கு அறிவித்தும், அந்த நோய் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை; தடுப்பு மருந்தும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த பேரிடரில் இருந்து, கடவுள் தான், நம்மை காப்பாற்ற வேண்டும் என, மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்றைய நிலையில், கடவுள் நம்பிக்கை மட்டுமே, நம்மை உயிர்ப்புடன் வாழ வைத்துள்ளது. எத்தனையோ பேரிடர்களில் இருந்து, இவ்வுலகை காத்த இறைவன், இந்த கிருமியிடம் இருந்தும், மக்களை காப்பாற்றுவார் என, நம்புவோம்.
ஊரடங்கு காலத்தில், மளிகை, காய்கறி, மருந்தகம் என, அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, 'டாஸ்மாக்' கடைகளும் திறக்கப்பட்டன; ஆனால், இறைவனை வணங்க, கோவில்களை மட்டும் திறக்கவில்லை.மது வாங்க செல்லும், 'குடி'மகன்கள், சமுக இடைவெளியுடன் செல்கின்றனர் எனும்போது, இறைவனை வணங்க செல்லும் பக்தர்கள், பொறுப்புணர்வு இன்றி இருப்பரா?கோவில்களை திறந்து, கடவுளை தரிசிக்க, சில கட்டுப்பாடுகளுடன், மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கோவில்களில் செயல்படும், அன்னதான திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை ஏன் மறந்தனர்?

வே.பாலமுருகன்,சென்னிமலைபாளையம், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வல்லரசு நாடுகளே, கொரோனாவை கட்டுப்படுத்த திணறிக் கொண்டிருக்கும் போது, இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.ஆனால், 50 நாட்களுக்கும் மேலாக நீடித்த ஊரடங்கால், மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையோ பரிதாபம். அவர்களின் நிலை, அனைத்து மாநிலங்களிலும் மோசமாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகள், இந்த தொழிலாளர்களுக்கு, எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. குடும்பம், குழந்தைகளோடு, 400 கி.மீ.,க்கு மேல், நடந்து செல்லும் அவர்களை பார்க்கையில், கண்ணில் நீர் வழியாமல் இல்லை.
மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவிற்கு முன், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை பற்றி யோசித்திருந்தால், இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.எங்கு வேலை செய்கிறாரோ, அந்த நிறுவனமே, தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தால், அவர்களுக்கு துயரம் ஏற்பட்டிருக்காது.அவர்கள் யாரும், கொரோனா பயத்தில், தம் குடும்பத்தை பார்க்க இடம் பெயர்ந்து செல்லவில்லை. கையில் பணமில்லை; பசியின் கொடுமையால் தான், சொந்த ஊருக்கு பயணப்பட்டனர்.'பசி' என்பது, வெறும் வார்த்தையல்ல; உணர்வு. எந்த ஊரடங்கு நேரத்திலும், வயிறு எனும் இயந்திரம் இயங்கிக் கொண்டே தான் இருக்கும்.'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடிய, மகாகவி பாரதியை பெற்ற நாட்டில், பட்டினியால் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் கொடுமை நடக்கிறது.
அவர்களின் நீண்ட பயணத்தின்போது, வழியிலேயே, விபத்தில் பலர் இறந்தனர். ஊரடங்கிற்கு முன், தொழிலாளர் நிலை குறித்து, அரசு சிந்தித்திருக்க வேண்டும். தொழிலாளர்களின் சொந்த ஊர் பயணம், சரியான நேரத்தில், முறையான வாகனத்தில் அமைந்திருக்க வேண்டும். அவர்களை ஏன் மறந்தனர்?

எச்சரிக்கை வேண்டும்!

ப.அரவிந்தன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கண்ணுக்கு தெரியாத, கொரோனா வைரஸ், நான்கு மாதங்களாக, இந்த உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது. உலகப் போர்களை விட, அதிக மக்களை பலி வாங்கியுள்ளது, இந்த கிருமி.
கொரோனா வைரசால், இதுவரை, உலகம் முழுதும், 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்த எண்ணிக்கைக்கு, இப்போது முடிவு கிடையாது.மருத்துவத்தில் வளர்ந்த நாடுகள், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அது வரை, கொரோனா ஒரு தொடர்கதை!உணவு பற்றாக்குறை, பொருளாதார இழப்பு என, உலகம் மீண்டு வர, எத்தனை ஆண்டுகளாகுமோ தெரியாது. அனைத்து நாடுகளும் இணைந்து, உலகை காக்க வேண்டும். நிதிச்சுமையைப் பகிர்ந்து, உலக மக்கள் அனைவருக்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை, நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தான் ஒரே வழி. அதற்கு, இயற்கையான, நம் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இனியும் ஊரடங்கு நீடித்தால், நாடு தாங்காது. எனவே, கொரோனா வைரசுடன் வாழ, மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பது, உண்மை தான்; ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
22-மே-202006:07:32 IST Report Abuse
veeramani இனிமேலும் கொரநா என்று பேசாமல் உழைப்பதுற்கு தயாராகவேண்டும். விவசாயம், மற்றும் பழங்கள் , இவரை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் களங்களில் உணவுப்பஞ்சம் வராமல் மக்களை பாதுகாக்கவேண்டும். ரியல் எஸ்டேட் கட்டுமானம் போன்ற துறைகளை ஓரம்கட்டவேண்டும். குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அரசாங்கம் மிக்ஸ்பிரிய ஆதரவு அளிக்கவேண்டும் இதனால் மக்களின் உழைப்ப்பை கொண்டு மேன்மேலும் வளர்ச்சிகு அனைவரும் பங்காளிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X