பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 21, 2020
Share
 பேச்சு, பேட்டி, அறிக்கை


'அப்பாவி தொழிலாளர்களை, 55 நாட்கள் நடக்க வைத்து விட்டு, இப்போது, மூன்று நாட்களுக்கு முன், கரிசனம் காட்டுவது, காங்., செய்யும் அரசியல் அல்லவா...' என, தடாலடியாக கேட்கத் துாண்டும் வகையில், கரூர் தொகுதி, காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: '
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வர காங்கிரஸ் அனுப்பிய, 1,000 பேருந்துகளில், பா.ஜ., கொடி கூட கட்டிக் கொள்ளுங்கள். தயவுசெய்து அவர்களை அழைத்து வாருங்கள்' என, எங்கள் கட்சி பொதுச் செயலர் பிரியங்கா மன்றாடிய பிறகும், உ.பி., அரசு மறுத்துவிட்டது, ஈவு இரக்கமற்ற அரசியல்.



'நீங்கள், சட்டப்படி தான் நடக்கிறீர்களா; ஜாதியின் பெயரால், யாரையும் சாடக் கூடாது என, சட்டம் சொல்கிறது. ஆனால், அதைத் தானே, 60 ஆண்டுகளாக செய்து வருகிறீர்கள்...' என, நெத்தியடியாக கேட்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
அரசியலமைப்பு சட்ட முகவுரையில் உள்ள, 'சோஷலிஸ்ட்' என்ற தத்துவத்தை புறக்கணிக்கலாமா... தற்போதுள்ள சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் திட்டம்- தந்திரத்தின் பின்னணி -குறித்து எச்சரிக்கை தேவை.



'எதற்கும் துணிந்து தான், பா.ஜ., தலைவரை சந்தித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தால், பா.ஜ.,வில் சேர்ந்து விடுவீர்கள் போலிருக்கிறதே...' என, சொல்லும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி பேட்டி
: தி.மு.க.,வில் நான் ஒரு சாதாரண ஆள். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், என் பதவிகளை பறித்துள்ளனர். அந்தியூர் செல்வராஜிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அவருக்கு என் வாழ்த்துகள்!


'போராட்டம் நடத்த, அவர்களை துாண்டுவதற்காக, இதுபோன்ற ஆதரவு அறிக்கை வெளியிடுகிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மாநில செயலர், முத்தரசன் அறிக்கை:
அரசு பணிக்கு அனுப்பப்பட்ட, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின், 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு, மீண்டும் பணி அமர்வு வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., தலையிட்டு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


'ஒன்றிணைவோம் வா திட்டத்தில், இதற்கு நிதி ஒதுக்கி, அழைத்து வரலாமே...' என, யோசனை கூற தோன்றும் வகையில், லோக்சபா தி.மு.க., குழுத் தலைவர், டி.ஆர்.பாலு அறிக்கை:
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், நாடு திரும்ப முடியாமல், சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல நாடுகள், தங்கள் நாட்டவரை அழைக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதுபோல, தமிழர்களை, சிறப்பு விமானங்கள் வாயிலாக, தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X