மேற்கு வங்கத்தை வாரி சுருட்டிய 'அம்பான்',72 பேர் பலி!

Updated : மே 23, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா : ஒடிசா, மேற்கு வங்கம் இடையே, மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்த, அதிதீவிர சூப்பர் புயலான, 'அம்பான்' மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்டுள்ளது. மாநிலம் முழுதும், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததில், மாநிலம் முழுதும், தகவல் தொடர்பின்றி இருளில் மூழ்கியது. இந்த கடுமையான புயலுக்கு, 72 பேர் பலியானதாக தகவல்
மேற்கு வங்கம்'அம்பான்'  72 பேர் பலி!

கோல்கட்டா : ஒடிசா, மேற்கு வங்கம் இடையே, மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்த, அதிதீவிர சூப்பர் புயலான, 'அம்பான்' மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்டுள்ளது. மாநிலம் முழுதும், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சாய்ந்ததில், மாநிலம் முழுதும், தகவல் தொடர்பின்றி இருளில் மூழ்கியது. இந்த கடுமையான புயலுக்கு, 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவான அம்பான் புயல், அதிதீவிர சூப்பர் புயலாக உருமாறி, மேற்கு வங்கம், அண்டை நாடான வங்கதேசம் இடையே, நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுதும், பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.கடந்த, 100 ஆண்டுகளில், மேற்கு வங்கம் எதிர்கொண்ட, மிக தீவிரமான புயல், அம்பான் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் திகா கடற்கரை பகுதியில், நேற்று முன்தினம், 2:30 மணிக்கு, 190 கி.மீ., வேகத்தில் புயல் வீசியது.


latest tamil news

போக்குவரத்து தடைஇதனால், தலைநகர் கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.இதில், வீட்டுக் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன; ஆயிரக்கணக்கான மரங்களும், 'மொபைல் போன்' கோபுரங்களும் சாய்ந்தன. பல முக்கிய சாலைகளில், போக்குவரத்து தடைபட்டது. புர்த்வான், மேற்கு மிட்னாபூர் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அழிந்து நாசமாயின.மாநிலம் முழுதும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது.கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாமல், உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்ட வண்ணம் உள்ளனர். இந்த புயலில் இதுவரை, 72 பேர் பலியானதாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


latest tamil news
'வீடியோ கான்பரன்ஸ்'இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, தலா, 2 முதல், 2.5 லட்சம் ரூபாய் உதவித் தொகையை, மாநில அரசு வழங்கும்.வடக்கு மற்றும் தெற்கு பர்கனாஸ் மாவட்டங்கள், முழுதுமாக தரைமட்டமாகி உள்ளன. இங்கு, மீண்டும் அனைத்து கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கிறோம். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை, பிரதமர் நரேந்திர மோடி, நேரில் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.என் வாழ்நாளில், இப்படியொரு இயற்கை சீற்றத்தையும், பாதிப்பையும் கண்டதில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் வருவேன். சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஒடிசா பாதிப்புகள் குறித்து, அம்மாநில தலைமை செயலர், திரிபாதி கூறியதாவது:ஒரு லட்சம் ஹெக்டேரில், அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் முழுதும் நாசமானது. 1,500 கிராமங்களில் வசிக்கும், 45 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சம் பேர் வரை, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள், போர்கால அடிப்படையில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை கமிட்டி கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில தலைமை செயலர்கள் உட்பட, அனைத்து துறை உயரதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.மேற்கு வங்கத்தில், ரயில்வே, விவசாயம், மின்சாரம், தொலை தொடர்பு துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச சேதம் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்யுமாறு, அதிகாரிகளுக்கு, கேபினட் செயலர் உத்தரவிட்டார்.மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த கூடுதல் குழுக்கள், மேற்கு வங்கம் விரைகின்றன. பாதிப்பு நிலவரம் குறித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வாயிலாக உரையாடினார்.அப்போது, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என, அவர் உறுதி அளித்தார்.


கண்காணிப்புபுயல் பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு, இது சவாலான காலகட்டம். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அவர்களுக்கு துணை நிற்கும்.மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறை உயர் அதிகாரிகளும், நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விரைவில் இயல்பு நிலை திரும்ப பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.


வங்கதேசத்தில் பலி 12மேற்கு வங்கத்தில், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் கரையை கடந்த அம்பான் புயல், அண்டை நாடான வங்கதேசத்தை, மாலை, 5:00 மணியளவில் கடந்தது. மணிக்கு, 180 முதல், 200 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இந்தியா -- வங்கதேசம் பகுதிகளில் அமைந்துள்ள சுந்தர வன காடுகள், பலத்த சேதமடைந்தன. வங்கதேசத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு இதுவரை, 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
22-மே-202012:51:13 IST Report Abuse
M.P.Madasamy அம்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்பானிகள் உதவ முன்வருவார்களா?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
22-மே-202004:12:47 IST Report Abuse
blocked user மம்தா போலவே புயல் வேலை செய்திருக்கிறது. சீக்கிரம் பாதிக்கப்பட்டோருகு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X