பத்திரிகை துறையின் கோரிக்கையை அரசுகள் ஏற்க வேண்டும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரிகை துறையின் கோரிக்கையை அரசுகள் ஏற்க வேண்டும்

Updated : மே 23, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (11)
Share
பத்திரிகை துறையின் கோரிக்கையை அரசுகள் ஏற்க வேண்டும்

'அரசுக்கும், மக்களுக்கும் இணைப்பு சங்கிலியாக செயல்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், பத்திரிகை துறையின் கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்' என, த.மா.கா., தலைவர், வாசன் கூறியுள்ளார். 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், 'தி இந்து' பதிப்பக குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர், த.மா.கா., தலைவர், வாசனை நேற்று சந்தித்து, பத்திரிகை துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர்.
மேலும், பத்திரிகை துறை பற்றிய பல்வேறு செய்திகள், தகவல்கள் குறித்தும் பேசினர்.

இது தொடர்பாக, வாசன் அறிக்கை:

மத்திய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும், இணைப்பு சங்கிலியாக செயல்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது பத்திரிகை துறை.பார்லிமென்ட், சட்டசபை கூட சில காலங்கள் முடங்கி போகலாம். ஆனால், எந்த காலக்கட்டத்திலும், பத்திரிகை துறை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அது தான், மக்களாட்சியின் உண்மையான உயிர்நாடி, மூச்சு, பேச்சு.பத்திரிகை துறை எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்னைகளில் இருந்து, அதை விடுவிக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை.நான் ராஜ்யபா எம்.பி.,யாக, அடுத்த மாதம், டில்லிக்கு செல்லும் போது, பிரதமரை சந்தித்து, தமிழகத்தின் பிரதான கோரிக்கைகளில், பத்திரிகை துறை சார்ந்த கோரிக்கையை, முதன்மையான கோரிக்கையாக கொடுத்து, நிறைவேற்ற வலியுறுத்துவேன்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.


கோரிக்கைகள் எளிதாக வெற்றி பெறும்: கே.எஸ்.அழகிரி''பத்திரிகை துறையின் கோரிக்கைகள் எளிதாக வெற்றி பெற, நாங்கள் ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.கொரோனாவால் செய்தித்தாள் நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை தீர்க்க, எம்.பி.,க்கள் வாயிலாக, பிரதமருக்கு அழுத்தம் தரும்படி, செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசியல் தலைவர்களை சந்தித்து, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரியை, 'தினமலர்' இல.ஆதிமூலம், 'ஹிந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர், நேற்று சந்தித்து பேசினர்.அப்போது, செய்தித் தாள்களுக்கான சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும்; விளம்பர கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட, பத்திரிகை துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, கே.எஸ்.அழகிரியிடம் வழங்கினர்.இந்த சந்திப்பின் போது, எம்.பி.,க்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், டாக்டர் செல்லக்குமார், ஊடக பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, பொதுச் செயலர் டி.செல்வம் ஆகியோரும் உடனிருந்தனர்.சந்திப்புக்கு பின், நிருபர்களிடம், கே.எஸ்.அழகிரி கூறியதாவது:செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள், தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு, அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் ஆதரவையும், காங்கிரஸ் எம்.பி.,க்களின் ஆதரவையும் கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக, சோனியாவிடம் தெரிவிப்போம். ஏனென்றால், இது, ஒரு மாநில பிரச்னை மட்டு மல்ல; தேசிய பிரச்னை.ஜனநாயகத்தின் நான்கு துாண்களில், செய்தித்தாள் மிக முக்கியமான துாண். இவர்களின் கோரிக்கைகள் எளிதில் வெற்றி பெற, அகில இந்திய காங்., கட்சி யின் ஒப்புதல் பெற்று, அவர்களுக்கு தர வேண்டிய ஆதரவை தர, நாங்கள் முடிவு செய்துள்ளோம்.இது தொடர்பாக, கட்சி தலைவர்களுடன் பேச உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
2 ஆண்டுகளுக்கு வரி விலக்குமோடிக்கு திருமாவளவன் கடிதம்'பத்திரிகை துறைக்கு, அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு, முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் தலைமை அலுவலகம் அறிக்கை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, அவரது அசோக் நகர், அம்பேத்கர் திடலில், 'தினமலர்' இல.ஆதிமூலம், 'ஹிந்து' என்.ராம், 'தினகரன்' ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.அப்போது, அச்சு ஊடகத்தின் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும்படி தெரிவித்தனர். அரசு விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும்; அரசு விளம்பரக் கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் ஜனநாயகப்பூர்வமானவை; விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. திருமாவளவனும், ரவிக்குமாரும், அச்சு ஊடகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு, திருமாளவன் எழுதிய கடிதம்:ஊரடங்கால், அச்சு ஊடகத்தினர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். நெருக்கடியை சமாளிக்க முடியாமல், செய்தித்தாள்களின் பக்கத்தை குறைத்தல், பதிப்புகளின் எண்ணிக்கை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளனர். ஆனாலும், நெருக்கடியில் இருந்து, அவர்களால் மீள முடியவில்லை. இத்துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாவும், 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில், மத்திய அரசு உதவி செய்வது அவசியம்.செய்தி தாள்களுக்கான சுங்கவரியை குறைக்க வேண்டும். விளம்பரத்திற்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அரசு விளம்பரக் கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்.

அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு, முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவிக்கும் விளம்பரங்களை அதிகமாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை, தாங்கள் நிறைவேற்றி தருவீர்கள் என, நம்புகிறோம்.இவ்வாறு, கடிதத்தில் கூறிஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X