கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்க, அவதூறு சட்டத்தை, அரசு பயன்படுத்த முடியாது!

Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : 'தினமலர்' நாளிதழ் உட்பட, சில பத்திரிகைகள் மற்றும் வார இதழுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட, 28 அவதுாறு வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

 கடந்த, 2012 நவம்பரில், 'தீபாவளி சிறப்பு பஸ்களை இயக்க கத்துக்குட்டி டிரைவர்கள்' என்ற தலைப்பில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தி, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, அப்போதைய முதல்வர், ஜெயலலிதா சார்பில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது 'மந்திரி தம்பியால், அரசு கேபிள், 'டிவி' அபகரிப்பு' என்ற தலைப்பில் வெளியான செய்திக்காக, அப்போதைய அமைச்சர், செந்தில் பாலாஜி சார்பில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டது

 'அலட்சியம்; கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தாமல் மின்வாரியம்; கரும்பு ஆலைகளில் உள்ள, மின் உற்பத்தி நிலையங்கள் முடக்கம்' என்ற செய்திக்காக, அப்போதைய அமைச்சர், விஸ்வநாதன் சார்பில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டதுஇதுதவிர, மேலும் இரண்டு அவதுாறு வழக்குகள் என, 'தினமலர்' நாளிதழுக்கு எதிராக, மொத்தம் ஐந்து அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன. அத்துடன், 'ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, தினகரன், முரசொலி, தமிழ் முரசு மற்றும் நக்கீரன்' வார இதழ் ஆகியவற்றுக்கு எதிராகவும், அந்தந்த பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளுக்காக, அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.

மனு தாக்கல்'தினமலர்' நாளிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அவதுாறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அப்போதைய ஆசிரியரான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளரான, டாக்டர் இரா.லட்சுமிபதி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மற்ற பத்திரிகைகள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவதுாறு வழக்குகள் தொடர, அரசு வழக்கறிஞருக்கு அனுமதி அளித்து, பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்தும், நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களில் கூறப்பட்டதாவது: வெவ்வேறு கருத்துக்களை தெரிவிப்பது, விமர்சிப்பது, அவதுாறாக ஆகாது; உண்மை, பொது நன்மை என்ற அடிப்படையில், செய்தி வெளியிடப் படுகிறது. அதற்கு, உள்நோக்கம் எதுவும் கிடையாது.அரசு நிர்வாகத்துக்கு பொறுப்பேற்பவர்கள், விமர்சனத்தை எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும்; நிர்வாகத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை, பொது மக்களுக்கு உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள, கருத்து சுதந்திரத்தில் குறுக்கிடுவது போல், பத்திரிகைகளுக்கு எதிரான புகார்கள் உள்ளன.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டது.
அரசு பதில் மனு : அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'நிர்வாகத்தில் பொறுப்பு வகிப்பவர்களை, அவதுாறு செய்யும் நோக்கில், செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கு தொடர, அரசு வழக்கறிஞருக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருப்பது, சட்டப்படியானது தான். புகாரை பரிசீலித்து தான், விசாரணைக்கு நீதிபதி எடுத்துள்ளார்' என, கூறப்பட்டுள்ளது. மனுக்களை, நீதிபதி அப்துல் குத்துாஸ் விசாரித்தார்.

'தினமலர்' நாளிதழ் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐ.சுப்ரமணியன், வழக்கறிஞர் இளம்பாரதி, மற்ற பத்திரிகைகள் சார்பில், வேறு வழக்கறிஞர்களும் ஆஜராகினர். நீதிபதி அப்துல் குத்துாஸ் பிறப்பித்த உத்தரவு: அவதுாறு சட்டத்தை பொறுத்தவரை, நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும், அரசு, ஒரு பெற்றோரை போன்றது. சில குழந்தைகள், பெற்றோரை அவமதிப்பர். அவ்வாறு அவமதித்தாலும், அந்த குழந்தைகளை பெற்றோர் விட்டு விட மாட்டார்கள். பிள்ளைகள் திருந்தி வருவர் என்ற நம்பிக்கையில் இருப்பர்.

குழந்தைகளின் நடத்தை, குணம் திருத்தவே முடியாது என்ற நிலையில் தான், பெற்றோர் கை கழுவி விடுவர். அவதுாறை பொறுத்தவரை, பெற்றோர் போன்ற நிலை தான், அரசுக்கும் இருக்க வேண்டும். தவறை உணர வைக்க, சட்டத்தில் மற்ற வழிகள் இருக்கும் போது, அவதுாறு வழக்கை அரிதாகவே, அரசு பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் எண்ணிக்கையில் அடங்காமல் வழக்குகள் பெருகி விடும்.கடந்த, 2012 முதல், 2020 வரை தாக்கல் செய்யப்பட்ட அவதுாறு வழக்குகளில், 226 வழக்குகள் வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

எந்த அரசியல் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும், வழக்குகள் தொடரப்படுகின்றன. சில நேரங்களில் பழிவாங்கும் விதமாக, எந்தவித பரிசீலனையும் இல்லாமல், வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.இத்தகைய போக்கை, கட்டுப்படுத்த வேண்டும்; முளையிலே கிள்ளி எறிய வேண்டும். அவதுாறு சட்டம், உன்னதமான நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. அவசியத்துக்காக தொடரப்பட வேண்டும்.

பகை தீர்க்கும் விதமாக, எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு எதிராக, துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்கள், பொது ஊழியர்கள், மக்களுக்கு கடமைப்பட்டவர்கள். விமர்சனத்தை எதிர்கொள்ளும் திறன் வேண்டும். அரசு வழக்கறிஞர் என்பவர், தபால் அலுவலகம் போல செயல்பட முடியாது. குற்ற வழக்கு தொடுப்பதற்கு முன், தனிப்பட்ட முறையில் பரிசீலிக்க வேண்டும்.

நீதிமன்றத்துக்கும், அவர் நியாயமானவராக இருக்க வேண்டும்.அவதுாறு வழக்கு தொடர, அரசு வழக்கறிஞருக்கு ஒப்புதல் அளித்த உத்தரவில், அரசை அவதுாறு செய்துள்ளனரா என்பது பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. முழுமையாக பரிசீலிக்காமல், இயந்திரகதியாக, அவதுாறு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரும், செஷன்ஸ் நீதிமன்றங்களும், சரிவர பரிசீலிக்கவில்லை.

இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே, அவதுாறு வழக்கு தொடர ஒப்புதல் அளித்த உத்தரவுகள், அதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யலாம். எனவே, பத்திரிகைகளுக்கு எதிரான வழக்குகள், ரத்து செய்யப்படுகின்றன.'தினமலர்' நாளிதழுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்த உத்தரவிலும், புகாரிலும், அரசை அவதுாறு செய்தனரா; எப்படி அவதுாறு செய்யப்பட்டது என்ற, அத்தியாவசிய காரணிகள் எதுவும் இல்லை. எனவே, அவதுாறு வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.

.நீதிபதியாக இல்லாமல், சாதாரண குடிமகன் என்ற முறையில், நாட்டின் வளர்ச்சிக்கு, மீடியாக்களின் பெரும் பங்கை நான் நினைவு கூருகிறேன். ஜனநாயகத்தின், நான்காவது துாணாக விளங்குவது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்றன. உண்மை, நேர்மையான முறையில் செய்திகளை வழங்குவதன் வாயிலாக, ஜனநாயகத்தின் ஒரு துாணாக விளங்குகின்றன. ஆனால், சில ஆண்டுகளாக, மீடியா உள்ளிட்ட ஜனநாயகத்தின் ஒவ்வொரு பகுதியும் கெட்டு போவதை பார்க்க முடிகிறது.

இந்த கெட்டு போன பகுதியை அகற்றாவிட்டால், ஜனநாயகத்துக்கே ஆபத்தாகி விடும். நம் தேசத்தின் மந்திரம், 'வாய்மையே வெல்லும்' என்பது தான். தேசிய கீதம், கொடி, சின்னத்தை நாம் மதிக்கிறோம். ஆனால், சில நேரங்களில், வாய்மையே வெல்லும் என்கிற மந்திரத்தை மறந்து விடுகிறோம். ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட இதுவும், மிகவும் முக்கியம்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மே-202001:33:58 IST Report Abuse
தமிழ்வேல் "அவன் மேல கேஸ் போடுன்னு" சொன்னால் அரசு வக்கீல் என்ன சொல்லுவாரு ?
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மே-202000:05:24 IST Report Abuse
தமிழ்வேல் சரியான தீர்ப்பு. அரசு வக்கீல்கள் அரசின் கைப்பாவைகளே. அவர்கள் தானாக ஒன்றும் செய்துவிட முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X