பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், மின்வெட்டு பிரச்னையால், இயந்திரங்கள் பழுதடைவதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவு உள்ளதால், தென்னை சார்ந்த தொழில்களும் உள்ளன. அதில், பொள்ளாச்சி, நெகமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு தென்னை நார் மற்றும் 'காயர் பித் பிளாக்' (தென்னை நார் கழிவு துகள் கட்டி) தயாரிக்கப்படுகிறது. இவை, சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து, கேரளாவுக்கு அதிகளவு நார் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த, ஒன்றரை மாதமாக உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.கடந்த சில வாரங்களாக, தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ஆனால், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக, நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி முருகானந்தம் கூறியதாவது:பொள்ளாச்சி பகுதியில், 350க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, தயாரிக்கப்படும் தென்னை நார், 95 சதவீதத்துக்கு மேல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கொரோனா பாதிப்பால், கடந்தாண்டு நவ., மாதத்தில் இருந்து தென்னை நார் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 15 நாட்களாக உற்பத்தி துவங்கியுள்ளது.வெளிமாநில தொழிலாளர்களும், சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவதால், இருக்கும் தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்ய வேண்டியதுள்ளது.ஆனால், தற்போது அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால், உற்பத்தி பாதிக்கப்படுகிறது. திடீர் மின்வெட்டு ஏற்படும் போதும், மின் வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போதும், இயந்திரம் பழுதடையும் நிலை உள்ளது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், மின்வெட்டால் நார் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களும் பாதிக்கிறது.பருவமழை துவங்க உள்ள நிலையில், உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தொடரும் பிரச்னையால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தட்டுப்பாடு இருந்தால், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE