சென்னை : ஒன்றரை மாதங்களாக மூடியிருந்த, மதுக் கடைகள், மீண்டும் திறக்கப்பட்டதால், ஒவ்வொரு, 'குடி'மகனும், ஆசை தீர குடித்து முடித்து விட்டனர்; இப்போது, அவர்கள் கையில் பணம் இல்லாததால், மது விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கால், மார்ச், 24ம் தேதி மாலை, 6:00 மணி முதல், மதுக் கடைகள் மூடப்பட்டன. தமிழக வரலாற்றில், ஒரு மாதத்திற்கு மேல், மது கடைகள் மூடப்பட்டது, இதுவே முதல் முறை. இதனால், மது கிடைக்காத அதிருப்தியில், 'குடி'மகன்கள் விரக்தி அடைந்தனர். சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து, இம்மாதம், 7, 8ல், மதுக் கடைகள் திறக்கப்பட்டன. ஒருவருக்கு, அதிகபட்சம், 180 மி.லி., உடைய, நான்கு, 'குவார்ட்டர்' பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கால் வேலை இல்லாத நிலையிலும், வீட்டில் குடும்ப செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து, 'குடி'மகன்கள், மது வகைகளை வாங்கினர்.இதனால், முதல் நாளில், 172 கோடி ரூபாய்; அடுத்த நாளில், 122 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாயின.
பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக் கடைகள், உச்ச நீதிமன்ற அனுமதியுடன், 16ம் தேதி, மீண்டும் திறக்கப்பட்டன.ஒரு கடையில், தினமும், 500 நபர்களுக்கு மட்டும், 'குடி'மகன்களின் தேவைக்கு ஏற்ப, மது வகைகள் வழங்கப்பட்டன. ஏதேனும் காரணத்தினால், மீண்டும் கடைகள் மூடப்படுமோ என்ற அச்சத்தால், அனைவரும், 10க்கும் மேற்பட்ட பாட்டில்களை வாங்கினர்.
இதனால், 16ம் தேதி, 163 கோடி ரூபாய்க்கும்; அடுத்த நாள், 133 கோடி ரூபாய்க்கும், மது வகைகள் விற்பனையாயின. பல நாட்களாக, மது கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த, 'குடி'மகன்கள் கடைகள் திறந்த, இரண்டு - மூன்று நாட்களில், ஆசை தீரும் அளவுக்கு, மது வகைகளை வாங்கி குடித்துள்ளனர். இனி, அதிகளவுக்கு வாங்க, கையில் பணம் இல்லை.மதுக் கடை செயல்படும் நேரமும், 18ம் தேதி முதல், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிக்கு பதில், இரவு, 7:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பலரும்,ஒரு, 'குவார்ட்டர்' பாட்டில் தான் வாங்கிச் செல்கின்றனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், 98 கோடி ரூபாய்க்கும்; அதற்கு முந்தைய நாள், 91 கோடி ரூபாய் என்ற, வழக்கமான அளவுக்கு தான் மது விற்பனை நடந்தது. பலரிடமும் பணப்புழக்கம் இல்லாததால், இனி, மது விற்பனை, வழக்கமான அளவுக்கு அல்லது அதை விட குறைய வாய்ப்புள்ளது.சென்னையில், மீண்டும் மதுக் கடைகள் திறக்கப்பட்டாலும், சில தினங்களுக்கு மட்டுமே விற்பனை அதிகம் இருக்கும் என்றும், பின், குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE