அடிப்படை வசதியின்றி திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை| Dinamalar

அடிப்படை வசதியின்றி திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை

Added : மே 22, 2020
Share

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும், கழிவுநீர் வெளியேற வழியில்லாததாலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 50க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது, கொரோனாவால், அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மட்டும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.திருக்கோவிலுாரைச் சுற்றியிருக்கும் 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிணியை போக்கும் மையமாக இந்த மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கான அடிப்படை வசதிகள் என்று எடுத்துக் கொண்டால் எதுவுமே இல்லை.குறிப்பாக கழிவுநீர் செல்வதற்கு போதுமான வசதி இல்லை. மருத்துவமனை வளாகத்தில் 2 இடங்களில் செப்டிக் டேங்க் உள்ளது. இவை இரண்டும் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இது நோயாளிகளை மேலும் நோயாளிகள் ஆக்கும் அவலமாகும்.மேலும் மருத்துவமனையில் போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தால் பழுதடைந்த கட்டடத்தில், தரையில் பாய் போட்டு படுக்கும் அவலம் உள்ளது. மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசம். மருத்துவமனை வளாகம் முழுவதும் குளம்போல் தேங்கி நிற்கிறது.சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் புறநோயாளிகள், அறுவை சிகிச்சை, தடுப்பூசி பிரிவுகள் இயங்கி வருகிறது. மற்ற பிரிவுகள் இடநெருக்கடியில் அமைந்துள்ளது. திருக்கோவிலுாரைச் சுற்றியுள்ள 200 கிராம ஏழை மக்களின் சிகிச்சைக்கு வசதியாக உள்ள இந்த மருத்துவமனையை மேம்படுத்த விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்கு முதல் கட்டமாக மருத்துவமனை வளாகத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனையில் இட வசதி இல்லாததால், நகருக்கு வெளியே பெரிய அளவில் புதிய மருத்துவமனையை உருவாக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X