புதுடில்லி : 'இந்திய, நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடுவதன் மூலம், நேபாளம் தங்கள் எல்லைகளை, செயற்கையாக விஸ்தரிக்க முயல்கிறது. இது ஏற்புடையது அல்ல' என, மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா, நேபாளம், திபெத் எல்லைகளில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக், காலாபானி ஆகிய முக்கோண எல்லைகள், நேபாளத் துக்கு சொந்தமானது என, அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, நேற்று முன் தினம் தெரிவித்தார். இந்தப் பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, புதிய வரைபடத்தையும் அவர் வெளியிட்டார்.இந்தியா, நேபாளம் இடையே, கடந்த ஓராண்டாகவே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில், உத்தரகண்டில் இருந்து, கைலாஷ் மானசரோவர் செல்லும் பயணியருக்காக, லிபுலேக் பாஸ் வழியாக, 80 கி.மீ., தெலைவுக்கான புதிய சாலையை, இந்திய அரசு, அமைத்தது. இந்த சாலை, சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இதையடுத்து, நேபாளம், மீண்டும் எல்லை பிரச்னையை கையில் எடுத்துள்ளது.இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:இந்த எல்லை விவகாரத்தில், இந்தியாவுக்கு உள்ள உரிமை குறித்து, நேபாள அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கையில், நியாயமற்ற வரைபடத்தை வெளியிட்டு, எல்லை பகுதிகளை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் இருந்து, நேபாளம் விலகிக் கொள்ள வேண்டும். இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அவர்கள் மதிக்க வேண்டும். எல்லைப் பிரச்னையை, பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள, நேபாளம் முன்வரும் என நம்புகிறோம்.
லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடுவதன் மூலம், நேபாளம் தங்கள் எல்லைகளை, செயற்கையாக விஸ்தரிக்க முயல்கிறது. இது ஏற்புடையது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE