கோவை:உணவு பார்சல் அனுமதி வாயிலாக, 10 சதவீத வியாபாரம் கூட இல்லை என்றும், முழுமையாக திறக்க அனுமதி அளித்தால், சமூக இடைவெளி உள்ளிட்ட முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், கோவை ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவை கருதி, 33 துறைகளுக்கு, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஓட்டல் மற்றும் பேக்கரிகளில், பார்சல் வழங்க மட்டும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து வந்து, இங்கு தங்கி வேலை செய்பவர்கள், உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து, கோவைக்கு வேலை நிமித்தமாக வருபவர்கள், சாப்பிட வசதி இல்லை. பல ஆயிரம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ஓட்டல் உரிமையாளர்கள் பலருக்கு, பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், ஓட்டல்கள் திறக்க, அனுமதி அளிக்க வேண்டும் என, அரசுக்கு கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக இடைவெளி பின்பற்றி, வாடிக்கையாளர்களை அமர வைக்க, சிறு ஓட்டல்களில் இடவசதி இருக்காது. ஆகவே, முதல் கட்டமாக பெரிய ஓட்டல்களையாவது, செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே, இவர்களின் முக்கிய கோரிக்கை.
இது குறித்து, ஹரிபவன் ஓட்டல் உரிமையாளர் பாலசந்தர் கூறுகையில், ''மக்களுக்கு ஓட்டல் உணவும், அத்தியாவசிய தேவைதான். எல்லோரும் சமைத்து சாப்பிட முடியாது. தினமும் பார்சல் வாங்கி போய் சாப்பிட முடியாது.அதனால் நான்கு பேர் அமர்ந்து, சாப்பிடும் மேஜையில் இரண்டு பேர் மட்டும், சமூக இடைவெளியுடன், அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை, பின்பற்ற தயாராக இருக்கிறோம்,'' என்றார்.பார்சல் வியாபாரம் பத்தாதுகோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறும்போது, ''மார்ச், 22ம் தேதியில் இருந்து, ஓட்டல்கள் மூடி இருக்கின்றன. ஓட்டல்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் ஓட்டல்கள் சங்கம் சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
உணவு பார்சல் கொடுப்பதில், 10 சதவீதம் கூட வியாபாரம் இல்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. பெரிய பொருளாதார இழப்பில் இருக்கிறோம். ஓட்டல்களை திறக்க, அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு சொல்லும் விதிமுறைகளை கடைபிடிக்க, நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.
இனி இப்படித்தான்!
ஓட்டல் பரப்பளவுக்கு ஏற்ப, அதிகபட்சம் 20 வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். மீதமுள்ளவர்களை, சமூக இடைவெளி விட்டு வெளியே அமர வைக்க வேண்டும்.
டேபிள் அளவுக்கு ஏற்ப, சாப்பிடும் நபர்களுக்கு இடையே, டேபிளில் உரிய பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
சர்வர் அருகில் வந்து பரிமாறுவதை தடுக்க, 'பபே' முறையில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
உணவு பாத்திரங்களை கையாள்பவர், கிளவுஸ், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
கழிவறை, கை கழுவுமிடங்களில் இடைவெளி விட்டு நிற்க வசதியாக, குறியீடுகள் இட வேண்டும்.இது போன்ற விதிமுறைகளை, ஓட்டல் நிர்வாகங்கள் பின்பற்ற முன்வரும் பட்சத்தில், திறக்க அனுமதிப்பதில் தவறில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE