கோவை:கோவையில், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மேம்பாலம் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறையும், திருச்சி ரோட்டில், ராமநாதபுரம் அல்வேர்னியா ஸ்கூல் முன்பிருந்து துவங்கி, சுங்கம் ரவுண்டானா கடந்து, பழைய ரெயின்போ தியேட்டர் ஸ்டாப் முன் இறங்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத்துறையும் மேற்கொள்கின்றன.திருச்சி ரோட்டில், ராமநாதபுரத்தில் இருந்து, பாலத்தில் பயணிப்பவர்கள் உக்கடம் செல்ல, வாலாங்குளம் ரோட்டில் இறங்கும் வகையில் தளம் அமைக்க, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றித்தர வேண்டும்; சுங்கம் பூங்காவில் ஒரு பகுதியை கொடுக்க வேண்டுமென, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோரியிருந்தது.இதேபோல், ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் பாலத்தில் வருவோர், மீன் மார்க்கெட் முன் இறங்கும் வகையில், தளம் அமைக்க வேண்டும். இதற்கு, சலவையகம், சலவை தொழிலாளர் குடியிருப்பு, துாய்மை பணியாளர் குடியிருப்புகளை காலி செய்து கொடுக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை கோரியிருந்தது.இவ்விரு பணிகளையும் செய்து கொடுக்காமல், பல மாதங்களாக, மாநகராட்சி காலம் தாழ்த்தி வருவதால், பாலம் வேலையை தொடர முடியாத சிக்கல் தொடர்கிறது.இதுதொடர்பாக, துறை ரீதியான கலந்தாய்வு கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது; துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வக்குமார், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.திருச்சி ரோடு பாலத்துக்காக, பூங்காவில் ஒரு பகுதி மற்றும், 40 வீடுகளை மட்டும் அகற்றிக் கொடுக்க கோரினர். இதுதொடர்பாக, மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறி, நகரமைப்பு பிரிவினர் நழுவினர்.தேசிய நெடுஞ்சாலைத்துறையில் இருந்து, மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியிருப்பதாக, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே, இரு துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்து, தேவையான இடத்தை, அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. உக்கடம் பாலத்துக்கு, செல்வபுரம் பைபாஸில், 5 துாண்கள் கட்டுவதற்கு தேவையான இடம் கையகப்படுத்தி தர வலியுறுத்தப்பட்டது. துாய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி, மாற்று இடம் வழங்கி விட்டு, நிலம் கையகப்படுத்தி தருவதாக தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, ஏற்கனவே பலமுறை பேச்சு நடத்தி, பயனாளிகள் கணக்கெடுத்து, வீட்டு கதவுகளில், குடிசை மாற்று வாரியத்தால், எண் குறிப்பிடப்பட்டுள்ளது.மாற்று வீடு வழங்கி, காலி செய்து கொடுத்தால் போதும். இச்சூழலில் மீண்டும் பேச்சு நடத்துவதாக, மாநகராட்சி தரப்பில் தெரிவித்ததால், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE