ஊட்டி:ஊட்டியில், பிரசவித்த பெண் இறந்த சம்பவத்தை அடுத்து, தனியார் மருத்துவமனையில், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ்,26. இவரது மனைவி மாயா, 22, கடந்த 18ம் தேதி கார்டன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். 19ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அன்றிரவு மாயா திடீரென இறந்தார். உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, உடலை பெற, மாயா குடும்பத்தார் மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம், போலீசார்; வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், நள்ளிரவு,1:00 மணிக்கு, உறவினர்கள் உடலை பெற்று கொண்டனர். நேற்று அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.ஆர்.டி. ஓ., சுரேஷ் கூறுகையில், ''தனியார் மருத்துவமனையில் இருந்த பச்சிளம் குழந்தை, தொடர் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரின், கணவரின் தாய்க்கு ஓய்வூதிய பென்ஷன்; குழந்தைக்கு மருத்துவ செலவு ஆகியவற்றுக்கு, அரசு நிதி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை, ஊட்டியில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE