கூடலுார்:கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு உல்லள்ளி பகுதியில் இருந்த வந்த பழங்குடியினர், மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.'கூடலுார் ஓடகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்பது பேர், புளியாம்பாறை பழங்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர், காமராஜ் நகரை சேர்ந்த ஒருவர்,' என, 13 பழங்குடி இளைஞர்கள் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு உல்லள்ளி பகுதியில் இஞ்சி தோட்டத்தில் பணியாற்றி வந்தனர்.ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அங்கிருந்து, பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு வழியாக, நீண்ட துாரம் நடந்து, கூடலுார் பகுதிக்கு வந்தனர்.அவர்களை, கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி மற்றும் மருத்துவ குழுவினர் சந்தித்தனர். மருத்துவ குழுவினர் அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து, கொரோனா பரிசோதனைக்காக, மாதிரிகளை எடுத்து, தனிமைப்படுத்தினர்.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில்,''கூடலுார் வந்து சேர்ந்தவர்களின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. அவர்கள், காஞ்சிகொல்லி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவில், 'நெகடிவ்' என, வந்ததால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE