ஊட்டி:'தோட்டக்கலை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்களை சிறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரியில், பொருளாதாரம் பெரும்பாலும் தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியை சார்ந்து உள்ளது. தேயிலை மற்றும் காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தோட்டக்கலை துறையின் மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, '2020---21ம் ஆண்டிற்கு, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை வேளாண்மை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 2.5 ஏக்கருக்கு, 2,500 ரூபாய்; 60 ஏக்கருக்கு முட்டைகோஸ், காலிபிளவர் இயற்கை வேளாண்மை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 2.5 ஏக்கருக்கு 5,000 ரூபாய்,' என, 68 ஏக்கருக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.மேலும், பந்தல், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பந்தல் போட, 2.5 ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வீதம், 10 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும். அங்கக வேளாண்மை சான்றிதழ் பெற ஒரு விவசாயிக்கு, 500 ரூபாய் வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தேவையான ஆவணங்களுடன் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறுகையில்,''தோட்டக்கலை பயிர்களில் விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு தேவையான அளவு மானியம் வழங்கப்படுவதால் சிறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE