சென்னை: தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும், பரிசோதனை செய்யப்படுவதால், மூன்று நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, 9,000த்தை நெருங்கி விட்டது. சென்னையில் பாதிப்பு அதிகரிக்க, கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமானது. ஆரம்பத்தில், வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்து, கொரோனா உறுதியானால், அவரது குடும்பத்தார் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஒரு நபர் பாதிக்கப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த, 20 முதல், 60 பேருக்கு வரை, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 முதல், 15 பேருக்கு தொற்று கண்ட றியப்பட்டது. கடந்த, 14க்கு முன் வரை, இந்த நடைமுறை இருந்தது. இதனால், தினமும், 500க்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஆனால், 14க்கு பின், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த, 10க்கும் குறைவான நபர்களுக்கு தான், பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த, 15 முதல், 18 தேதி வரை, முறையே, 309, 332, 364 என்ற எண்ணிக்கையில், கொரோனா பதிவானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடித்து, பரிசோதனை செய்ய, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கொரோனா பாதித்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக, தினமும், 550 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE