மனாமா : கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவ பஹ்ரைனில் புதிதாக ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் பல்வேறு நகர பகுதிகளிலும் நோய் தொற்று தீவிரமாக வருகிறது. பஹ்ரைனிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பல இடங்களிலும் ரோபோக்கள் மூலம் நோயாளிகளுக்கான சேவை வழங்கப்படுகிறது.
தற்போது, பஹ்ரைன் நாட்டிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், நோயாளிகளுடனான தொடர்பை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது. சோதனை அடிப்படையில் இந்த ரோபோக்கள் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு அரசிடம் அறிக்கை அனுப்பப்படும். இதற்காக ஒரு பிரெஞ்சு நிறுவனத்துடன் ஒப்ப்நதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை கண்டறிதல், நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குதல் போன்ற சேவைகளை செய்யும். 12 வகையான மொழிகளை பேசும் வகையில் அமைக்கப்பட்ட ரோபோக்கள் மருத்துவமனையின் மற்ற பிற சேவைகளையும் செய்து வருகிறது.

இந்த வகை ரோபோக்களுடன் சென்சார் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் குறிப்பிட்ட தூரத்தில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE