65 நாட்களுக்கு பின் கனி மார்க்கெட் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

65 நாட்களுக்கு பின் கனி மார்க்கெட் திறப்பு

Added : மே 22, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், 65 நாட்களுக்குப்பின், கனி மார்க்கெட் நேற்று திறக்கப்பட்டது.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே, கனி மார்க்கெட்டில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 52 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் கட்டடம் கட்டும் இடத்தின் ஒரு பகுதியில், 200 தற்காலிக கடைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால், மார்ச், 16 முதல் இங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று காலை முதல் கனி மார்க்கெட் கடைகளை திறக்க, அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து கனி மார்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் நூர்சேட் கூறியதாவது: கடந்த, 65 நாட்களாக கடைகள் மூடப்பட்டதால், 200 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் பாதித்துள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகை விற்பனை, ரம்ஜான் விற்பனை, கோடை காலத்துக்கான பனியன், ஜட்டி, நைட்டி, டிரவுசர், துண்டு, காட்டன் புடவை உள்ளிட்ட விற்பனை முற்றிலும் பாதித்துவிட்டது. ஆனாலும், தற்போதைய திறப்பு, வியாபாரிகளுக்கு திருப்தி அளித்துள்ளது. பிற மாவட்ட, பிற மாநில வியாபாரிகள் வர அனுமதி இல்லை. இருந்தாலும், போனில் ஆர்டர் பெற்று, துணிகளை அனுப்பி வருகிறோம். இங்குள்ள, 200 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு விதிமுறையை முறையாக கடைப்பிடிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். கனி மார்க்கெட் திறக்கப்பட்ட விபரம் நேற்று தெரியாததால், கூட்டம் குறைவாக காணப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X