விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதி செய்ய வலியுறுத்தல்

Added : மே 22, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாவட்டத்தலைவர் கோபி தலைமையில், சி.இ.ஓ., முருகன் மற்றும் டி.இ.ஓ., கலாவதி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மேல்நிலைத்தேர்வு மைய மதிப்பீட்டு பணியில், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் அமைக்கப்படும் மதிப்பீட்டு பணி முகாம்களோடு மத்தூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கும் கூடுதலாக விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்க வேண்டும். இதனால், ஆசிரியர்கள் தாமதமின்றி விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு செல்ல இயலும். பிற மாவட்டங்களில் வசிக்கும், முதுகலை ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மையத்தில், விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களை தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்த அனுமதிக்க வேண்டும். மையங்களுக்கு, முதுகலை ஆசிரியர்கள் உரிய நேரத்தில் செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக முதுகலை ஆசிரியர்களுக்கு நாள்தோறும் முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்க வேண்டும். கை கழுவும் திரவம், சானிடைசர் ஆகியவை விடைத்தாள் திருத்தும் முகாம்களில் வைக்க வேண்டும். உணவு, தேநீர், குடிநீர் வசதி, சுகாதாரமான கழிவறை வசதி ஆகியவை ஏற்பாடு செய்ய வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் நாள்தோறும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். உடல் நலம் குன்றிய ஆசிரியர்கள், கருவுற்ற பெண் ஆசிரியர்கள் மற்றும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X