கிருஷ்ணகிரி: நூறு சதவீத மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர், பாசன கருவிகள் வழங்கப்படுவதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில், சொட்டு நீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் மழைநீர் தெளிப்பான்கள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. கரும்பு, பருத்தி, மக்காசோளம், நிலக்கடலை, சிறுதானியங்கள், துவரை மற்றும் இதர பயறு வகை பயிர்களுக்கு, வேளாண் துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறைகளான சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றை பின்பற்றுவதால், 30 முதல், 40 சதவீதம் வரை பாசன நீர் சேமிக்கப்படுகிறது. 30 கோடி ரூபாயில், இந்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து வட்டாரங்களில், 2.84 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே சொட்டு நீர், தெளிப்பு நீர் அமைக்க விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பகுதியிலுள்ள உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE