சேலம்: பெங்களூருவில் இருந்து மதுரைக்கு, அழுகிய காய்கறிகளுக்குள், மறைத்து கடத்தப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
ஊரடங்கு அமலால், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் ஆகியவற்றின் விலை, 10 மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் இருந்து மதுரைக்கு, அழுகிய காய்கறிகளுக்குள் மறைத்து, குட்கா கடத்தப்படுவதாக, சேலம் குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலுக்கு தகவல் கிடைத்தது. கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படை, கருப்பூர் சுங்க சாவடி அருகே, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்து கொண்டு இருந்த லாரியை நிறுத்தும் படி எச்சரித்தனர். லாரி நிற்காமல் சென்றது. லாரியை துரத்தி வந்த தனிப்படையினர், கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே மடக்கினர். லாரியின் கிளீனர் தப்பி ஓடி விட்ட நிலையில், டிரைவர், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்த பச்சியப்பன் மகன் ஜம்பு, 40, என்பவரை போலீசார் பிடித்தனர். லாரியை கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில் அழுகிய காய்கறிகளுக்குள், 24 மூட்டை, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. அவற்றின் குறைந்தபட்ச விலை மதிப்பீட்டில், அவை, 10 லட்சம் ரூபாயாகும். ஆனால், விற்பனை விலையின் அடிப்படையில், அதன் மதிப்பு, 50 லட்சம் ரூபாயை தாண்டும்.
இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக, மதுரைக்கு லாரியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குட்கா லாரியை மடக்கி பிடித்து, டிரைவரை கைது செய்துள்ளோம். லாரியின் உரிமையாளர் தொப்பூரை சேர்ந்த பிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணையில் குட்கா கடத்தலில், தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளது. விரைவில், கடத்தலில் ஈடுபடும் பெரிய முதலைகள் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE