பவித்திரம் ஏரி புனரமைப்பு திட்டப்பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவித்திரம் ஏரி புனரமைப்பு திட்டப்பணி துவக்கம்

Added : மே 22, 2020
Share

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் தாலுகா, தோட்டமுடையாம்பட்டி கிராமம், கொல்லிமலையில் பெரியாறு உற்பத்தியாகி, நவலடிப்பட்டி மற்றும் பவித்திரம் ஆகிய கிராமங்கள் வழியாக, பவித்திரம் ஏரியை வந்தடைகிறது. அதன் மூலம், ஏரியை சுற்றியுள்ள 82.86 ?ஹக்டேர் பாசன வசதி பெறுகிறது. பவித்திரம் ஏரி பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ளது. ஏரியின் உபரிநீர், திருச்சி மாவட்டம், அய்யாறு உபவடிநிலத்தில் உள்ள ஜம்புமடை ஏரியை சென்றடைகிறது. கொல்லிமலை தெற்கு பகுதியின் அடிவாரத்தில் உள்ள பவித்திரம் ஏரி மற்றும் மகாதேவி ஏரிக்கு நீர் வழங்கும் வகையில், தனித்தனியாக அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த, 2017, அக்., 10 இரவு கொல்லிமலையின் தெற்கு பகுதியில், நீரிடியினால் பெய்த கனமழை காரணமாக, மறுநாள் பெரியாறு மற்றும் குருவச்சியாறுகளில் பெரும் வெள்ளம் வந்தது. அதனால், ஏரிக்கு நீர் வழங்கும் அணைக்கட்டு சேதமடைந்தது; ஏரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் இருகரைகள் உடைந்தன. அதன் காரணமாக சாகுபடி பயிர்கள் சேதமடைந்தன. சேதமடைந்த ஏரியை, 1.76 கோடி ரூபாய் மதிப்பில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 15 மீ., நீளத்துக்கு தடுப்பணை புதியதாக அமைக்கவும், ஆறுகளில், 10 இடங்களில், 384 மீ., நீளத்துக்கு தடுப்புச் சுவரும் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, கலெக்டர் மெகராஜ் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., சந்திரசேகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவிப்பொறியாளர் யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X