துபாய்: சவுதியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகியை படுகொலை செய்தவர்களை மன்னிப்பதாக அவரது மகன்கள் அறிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி கட்டுரை எழுதி வந்தார். 2018, அக்டோபர் 02ல், துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்ற அவரை சல்மானின் தூண்டுதலால் கொலை செய்து, உடல் பாகங்களை அழித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இக்கொலை தொடர்பாக 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சவுதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு, 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மற்றவர்களை விடுவித்தது. இந்த நிலையில் அவரது மகன் சலா கசோகி டுவிட்டரில் 'தியாகி ஜமால் கசோகி மகன்களான நாங்கள், எங்கள் தந்தையை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கிறோம்.' என கூறியுள்ளார்.

தீர்ப்புக்கு முன்பாக நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக கூறிய சலா கசோகி, தற்போது கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரலில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு செய்தியில், சவுதி அரசிடமிருந்து ஜமாலின் மகன்கள், பல கோடி மதிப்பிலான வீடுகள் மற்றும் மாதம் தோறும் குறிப்பிட்ட ஆயிரங்கள் பணம் பெறுகிறார்கள் என கூறியிருந்தது. ஆனால் இவற்றை அவரது மகன்கள் மறுத்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE