ஊரடங்கு உணர்த்திய உண்மைகள்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
Advertisement
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் மனம் பதற்றத்தில் இருந்தது. எப்படி ஊரடங்கு நாட்களைக் கழிக்கப் போகிறோம்? வீட்டுக்குள் இருந்தே பழக்கமில்லையே! பலசரக்கு எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியவில்லையே! கடைகள் அடைக்கப்பட்டால் என்ன செய்வது? என்று ஆயிரமாயிரம் கேள்விகள். எப்போதும் வெளியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் எல்லோரையும் கொரோனா வீட்டில் இருக்கவைத்து விட்டது. இவையின்றி
  ஊரடங்கு உணர்த்திய உண்மைகள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் மனம் பதற்றத்தில் இருந்தது. எப்படி ஊரடங்கு நாட்களைக் கழிக்கப் போகிறோம்? வீட்டுக்குள் இருந்தே பழக்கமில்லையே! பலசரக்கு எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியவில்லையே! கடைகள் அடைக்கப்பட்டால் என்ன செய்வது? என்று ஆயிரமாயிரம் கேள்விகள்.

எப்போதும் வெளியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் எல்லோரையும் கொரோனா வீட்டில் இருக்கவைத்து விட்டது. இவையின்றி நாமில்லை என்று நினைத்து வாழ்ந்த நமக்கு, அன்பைத் தவிர இந்த உலகில் எதுவும் பெரிதில்லை என்று உணரவைத்திருக்கிறது. பலநுாறு கோடி ரூபாய் சொத்திருந்தாலும் வெளியே ஒரு எட்டுகூட எடுத்துவைக்க முடியாமல் காரில் போகிறவர்களையும் காலில் நடக்கிறவர்களையும் ஒன்றென்று உணர்த்தி சமத்துவம் பேசியிருக்கிறது கொரோனா எனும் நோய்த் தொற்று.


யார் துணை


நமக்கு நாமே துணை, குடும்பத்திற்கும் நாமே துணை என்கிற உண்மையை ஆணி அடித்தார்போல் உள்ளத்துக்கு உணர்த்தியிருக்கின்றன இந்தக் கொரோனா நாட்கள். வெளியே உள்ளதுதான் உலகம் என்பதை மாற்றி நம் இல்லத்தின் உள்ளுக்குள் உள்ளதும் உலகம்தான் என்ற பேருண்மையை உணர்த்தியது. ஒருவாசல் மூடிய இறைவன் இன்னும் பல வாசல்களைத் திறந்துவைத்தான்.இணைய அங்காடிகளும் பல்பொருள் அங்காடிகளும் மூடப்பட்டுவிட்டதால் எங்கள் தெருவிலிருந்த சிறுசிறு கடைகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினோம். இல்லத்தில் இருப்பதால் குழந்தைகளோடும் குடும்பத்தாரோடும் அன்பின் மொழியில் இப்போது சுலபமாகப் பேசமுடிந்திருக்கிறது. பரந்த மைதானத்தில் உடற்பயிற்சி உடைகளுடனும் ஸ்போர்ட்ஸ் ஷூவுடனும் நடப்பதே நடைப்பயிற்சி என்பதை மாற்றி மொட்டைமாடியில் எட்டு போட்டு எட்டுவைப்பதும்கூட நடைப்பயிற்சி என்று புலப்பட்டது.


சிரமமா சிகரமாசிரமங்களைச் சிகரங்களாகவும் நினைக்க வழியுண்டு என்பதை வலி தந்த கொரோனா நாட்கள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இந்த நாட்களில் நம் மூன்றாம் கண்ணான கலைக் கண்ணைக் கொரோனா அற்புதமாகத் திறந்தது. உடனிருந்து உதவிகள் செய்து சமையலின் சுவையை அழகாக அறிய முடிந்தது. படிக்காமல் வைத்திருந்த நுால்களை வாசிக்கும் வாய்ப்பைக் கொரோனா நாட்கள் தந்தன. நேற்றுவரை கவனிக்காமல் விட்ட தோட்டத்தை களைவெட்டி ஒழுங்கு செய்தேன். கிளைகளை வெட்டிவிட்டதால் வெயில் கிடைக்காமல் பூக்காத மல்லிகை பூக்கத் தொடங்கியது. வீட்டில் அழைப்பு மணியின் ஓசை இல்லவே இல்லை.


அமைதி


நம் வாழ்க்கையைப் பின்னோக்கி ஓட்டிப் பார்ப்பதற்கான அமைதியான நேரம் நிறையவே கிடைத்தது. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து எதையாவது பேசியபடி உணவு உண்கிறோம். மனிதர்கள் யாவரும் இல்லத்தில் உள்ளதால் யானைகளும் மான்களும் ஊர்ப்பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. எங்கள் வீட்டு முற்றத்தில் தினைகொத்தித் தின்னக் குருவிகள் தினமும் வந்துவிடுகின்றன. எங்கள் இல்லத்து வெற்றிலைக் கொடிக்கருகே உள்ள மரப்பெட்டியில் குருவி முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கத் தொடங்கியிருக்கிறது.


ஒற்றுமை


உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் ஆயிரக் கணக்கில் உயிரிழப்புகளைச் சந்தித்து திக்குமுக்காடிக் கொண்டிருக்க, இந்த நாட்டு மக்களுக்குப் பேரிடர் என்றவுடன் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் உழைப்பாளிகளிலிருந்து பல்லாயிரம் கோடிகளைப் பொருளீட்டும் கோடீஸ்வரர்கள் வரை அத்தனை கோடி மக்களும் தங்கள் வருமானத்தை இழந்து வீட்டுக்குள் தங்களை முடக்கிக்கொண்டு தங்கள் ஒற்றுமையையும் தேசபக்தியையும் மருந்தாகத் தருகிறார்களே! வீட்டிற்குள் இருந்துகொண்டே கொரோனாவை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்களே! இதுதான் இந்தியாவின் பலம் என்பது. நம் தேசம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான் இன்று நம் தேகத்தைக் காத்துக் கொண்டிருக்கிறது.


வாழ்வதும் இனிய வாய்ப்பே


வாழ்வதும் ஓர் இனிய வாய்ப்பே என்று நினைத்தால் எதுவும் துன்பமில்லை. யாரையும் குற்றம் சொல்வதோ, குறைகூறுவதோ எளிதுதான். வீட்டில் இருந்துகொண்டு, நானாக இருந்தால் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் என்று சொல்கிறவர்களை, அடிக்கிற வெயில் தகிப்பில் உடல் முழுக்கக் கவச உடைகளுடன் இரவு பகல் பாராமல் கொரோனா வார்டில் உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கும் நண்பர்களுடன் ஒருமணி நேரம் பணி புரிந்துவிட்டுவந்து பேசுங்கள் என்று சொல்லுங்கள்.


இறைவேண்டல்


தெய்வத்திடம் வேண்டக் கூட வழியற்றுச் செய்வதறியாது யாவரும் திகைத்து நிற்கும் நிலையில், நம் ஒற்றுமையும் மனிதநேயமும் மட்டுமே இன்று உலகைக் காக்கும் அருமருந்துகள். எந்த வலிகள் வந்தாலும் அழுதால் மட்டும் குறையாது, மனம்வருந்தி இறைவனிடம் வேண்டித் தொழுதால் மட்டுமே குறையும். தினமும் காலையும் மாலையும் இந்த உலகில் கொரோனா அச்சம் நீங்கி எல்லோரும் பழையபடி நோயற்ற வாழ்வோடும் மகிழ்ச்சியோடும் வாழ வழிசெய்வாய் பரம்பொருளே என வேண்டுவோம்.


நல்ல மாற்றங்கள்


ஊரடங்கின் விளைவாகத் திருமணங்கள் ஆடம்பரங்கள் ஏதுமின்றி, முன்பு வீட்டில் நடந்ததைப் போல் எளிமையாக நடந்திருக்கின்றன. பொருட்களை வாங்கிக் குவிப்பதுதான் வாழ்க்கை என்று நினைத்தவர்களை உள்ளதைக் கொண்டு நல்லபடியாக இயல்பாக வாழ்வோம் என்று சொல்லவைத்திருக்கிறது. காய்கறி காலியாகிவிட்டதா? கவலை வேண்டாம் தோட்டத்து முருங்கைக் கீரையைக் கொண்டும் ஒருநாளை ஓட்டலாம் என்று இயற்கை நமக்கு உணர்த்தியிருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் சுத்தமாக்கப்பட முடியாமல் இருந்த கங்கையும் தாமிரபரணியும் தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொண்டு விட்டன. ஓசோன் ஓட்டை நம் ஊரடங்கு நாட்களால் அடைக்கப்பட்டுவிட்டதாய் அறிவியலாளர்கள் கருத்துச் சொல்கின்றனர். வாகனப் புகையால் மாசுற்ற பூமியில் துாய காற்று வீசத் தொடங்கியுள்ளது.


ஓட்டம் இல்லைகடிகாரத்தின் மூன்று முட்களுக்குப் பின்னால் நம்மைத் தலைதெறிக்க ஓடவைத்த வேலைப் பளு இப்போது நீங்கி எப்போது ஊரடங்கை விலக்குவீர்கள்? எனக்கு வேலை செய்ய ஆசையாய் இருக்கிறது என்று நம்மைச் சொல்லவைத்திருக்கிறது. இரவில் ராக்கோழிகளின் சப்தமும் கூட இப்போது துல்லியமாகக் கேட்கிறது. முன்பெல்லாம் ஓடியோடி பார்த்த தொலைக்காட்சித் தொடர்கள் நின்று போனதால் ஏன் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்? புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாமே என எண்ண வைக்கிறது. பறவைகளுக்குத் தினை வாங்கிவைத்து அவை தினை கொத்தும் அழகை ரசிக்கத் தோன்றியது. ரிசர்வ் வங்கி சொன்னால்கூட மற்ற வங்கிகள் கேட்காது என்பதற்குச் சாட்சியாய் பிடிக்கப்பட்ட வீட்டுக்கடனை எப்படியாவது சீக்கிரமாய் அடைத்துவிட்டுக் கடனில்லாமல் நிம்மதியாய் இருக்கவேண்டும் என்ற உணரவைத்துள்ளது.


மனநிறைவுமனத் திருப்தி வருவதற்கு வீடு நிறையப் பொருட்களும் கைநிறையப் பணமும் தேவையில்லை. போதும் என்கிற மனநிறைவு ஒன்றே போதும் என்று காலம் நமக்கு உணர்த்திவிட்டது. ஒரு பெரிய காட்டைக் கொளுத்த ஒரேயொரு தீக்குச்சி போதும்! அந்தத் தீக்குச்சியாக நாம் இருந்துவிடாது; எல்லோர் தாகத்தையும் நீக்கும் தண்ணீரைப் போல் பயன்மிகுந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று இந்த நாட்கள் உணர்த்தியிருக்கின்றன. சிறுதுாசி விழுந்ததுமே குளமாகிக் கலங்கிடும் கண்கள் மாதிரி, கடல் நீரில் பிறந்த உப்பை மழைநீர் மீண்டும் கரைப்பது மாதிரி நம்மை இந்த ஊரடங்கு நாட்கள் கரைக்கத்தான் செய்திருக்கின்றன. சாவியைக் காணவில்லை என்று பூட்டை உடைத்தபின்தான் சாவியே கிடைக்கிறது. என்னசெய்ய காலத்தின் விளையாட்டு சில நேரங்களில் எல்லை மீறிப் போகத்தான் செய்கிறது. கசக்கித்தான் பிழிகிறோம், கடைசிவரை இனிக்கத்தான் செய்கிறது கரும்பு. சிலநேரங்களில் காலமும் நம்மைக் கசக்கிப் பிழியத் தான் செய்கிறது. ஆனாலும் நம்பிக்கை இழக்கலாமா. ஆயிரம் காக்கைகளை விரட்ட ஒரு கல்போதும், ஆயிரம் பிரச்னைகளை விரட்ட ஒரே ஒரு மனஉறுதி போதும். அந்த மனஉறுதியே இன்றைய தேவை. அழுவதில் இல்லை வாழ்வின் நோக்கம். விழுந்த இடத்தில் தலைநிமிர்ந்து எழுவதே நாம் செய்யவேண்டிய ஒரே செயல்.
- பேராசிரியர் சவுந்தர மகாதேவன்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி

திருநெல்வேலி. 99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X