புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும்: ரகுராம் ராஜன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும்: ரகுராம் ராஜன்

Updated : மே 22, 2020 | Added : மே 22, 2020
Share
RaghuramRajan, EconomicPackage, Inadequate, FoodGrains, Migrants, Money, ரகுராம்ராஜன், பொருளாதாரம், திட்டம், புலம்பெயர், தொழிலாளர்கள், தானியங்கள், பணம்

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காய்கறிகள், சமையல் எண்ணெய் வாங்கவும், வாடகை செலுத்தவும் பணம் தேவை. எனவே உணவு தானியங்களோடு அவர்களுக்குப் பணமும் மத்திய அரசு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பல தொழில்துறைகள் முடங்கின. இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால், அதனை மேம்படுத்தும் வகையில் ரூ.21 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கான 5 கட்டங்களான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்நிலையில், ‛தி வயர்' செய்தி இணையதளத்திற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜன் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:


latest tamil news


கொரோனா வைரசால் உலகமே மிகப்பெரிய அவசர நிலையைச் சந்தித்து வருகிறது. அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை என்பது போலவே தோன்றுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், பல ஆண்டுகளாக பொருளாதாரச் சிக்கலில் குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை போன்றவை இருக்கும் சூழலில் கொரோனா மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகமான மீட்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்த பொருளாதார மீட்புத் திட்டங்களில் சில நல்ல அம்சங்களும் உள்ளன. ஆனாலும், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப, இந்த திட்டங்கள் போதாது.


latest tamil news


கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களையும், நிறுவனங்களையும் மீட்க மத்திய அரசு அதற்குரிய வழிகளைக் கண்டுபிடிப்பது அவசியமாகும். கொரோனா வைரசால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து சரிசெய்வது அவசியம். சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகமான நிதி உதவியையும் வழங்கிட வேண்டும், பொருளாதாரக் கொள்கையில் சீர்திருத்தம் செய்யவேண்டும். ஆனால், இப்போது அறிவித்துள்ள பொருளாதார நிதித் தொகுப்புத் திட்டம், பொருளாதாரத்தை மீட்கும் பிரச்னைகளை அடையாளம் காணவில்லை, புலம்பெயர் தொழிலாளர்களின் கவலைகளைத் தீர்ப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டது.

ஊரடங்கால் வேலையிழந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காய்கறிகள், சமையல் எண்ணெய் வாங்கவும், வாடகை செலுத்தவும் பணம் தேவை. எனவே உணவு தானியங்களோடு அவர்களுக்குப் பணமும் மத்திய அரசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தைக் காப்பதும், மக்களைக் காப்பதும் மிகவும் முக்கியம். மத்திய அரசு, தன்னால் முடிந்த அளவிற்கு பொருளாதாரத்தை உந்தித் தள்ள வேண்டும். அதிகமான மீட்பு நடவடிக்கை இல்லையெனில், பொருளாதாரம் மேலும் மோசமடையும்.


latest tamil news


கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் அலுவலகம் மட்டும் தனியாகச் செயல்பட்டால் முடியாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சியில் உள்ள சிறந்த அறிவார்ந்தவர்களையும், சமூகத்தில் உள்ள அறிவார்ந்தவர்களையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும். இல்லையெனில் இந்த சூழல் மிகவும் மோசமாகிவிடும். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மக்களையும், பொருளாதாரத்தையும் காயத்திலிருந்து குணப்படுத்தும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது என்பது தாமதமாகத்தான் வேலை செய்யும். ஏற்கெனவே கடன் பெற்று தொழில் செய்து வரும் இந்நிறுவனங்கள் மத்திய அரசு அளிக்கும் கடனால் மேலும் கடனாளி நிறுவங்களாக மாறக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X