செஞ்சி; தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண உதவியாக பல்வேறு தரப்பினரும் அரிசியை அதிகளவில் வழங்கி வருவதால் சில்லரை விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்கள் முடிந்து விட்டன. இதில் வேலை இழந்து, வருவாய் இன்றி பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,000 ரூபாயும், வழக்கமாக வழங்கும் இலவச அரிசியுடன், நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசியும், துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கி வருகிறது.தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், சங்கங்கள், தனி நபர்கள் என பலவேறு தரப்பினர்களும் துாய்மைப் பணியாளர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள், பழங்குடியினர், ஆட்டோ ஓட்டுநர், சலவைத் தொழிலாளர், முடிதிருத்தும் தொழிலாளர், தச்சர், நெசவாளர், நகை செய்பவர்கள் என வருவாய் இன்றி உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்றனர்.அத்துடன் அவரவர் தொழில் சார்ந்த சங்கங்கள் மூலமாகவும் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர். சில இடங்களில் போலீசாருக்கும் உயரதிகாரிகள் ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கி உள்ளனர். சில இடங்களில் அரசியல் கட்சிகள் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி வழங்கி வருகின்றனர்.நிவாரணம் வழங்குபவர்கள் துாய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமையளிக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதை கடமையாக செய்கின்றனர். கிராமப்புறங்களில் அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளவர்களும், ஏற்கனவே தலைவர்களாக இருந்தவர்களும் இவர்களுக்கு நிவாரணம் வழங்குகின்றனர்.இவர்கள், அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்குகின்றனர். காய்கறி, மளிகை வழங்க முடியவில்லை என்றாலும் அரிசியை கட்டாயம் வழங்குகின்றனர்.ஏற்கனவே அரசு தரப்பில் நிவாரணமாக கூடுதலாக அரிசி வழங்கியுள்ள நிலையில் 40 சதவீதம் குடும்பங்களுக்கு உதவி பொருளாக மேலும் அரிசி கிடைத்துள்ளது. நிவாரணம் வழங்குபவர்கள் அரிசியை சில்லரைக் கடைகளில் வாங்குவதில்லைஅரிசி ஆலைகளில் மொத்தமாக ஆர்டர் கொடுத்து அரசியல் கட்சி பெயர், தலைவர்கள் படம், சங்கங்களின் பெயர் போட்ட பைகளில் பேக் செய்து வாங்குகின்றனர். குறைந்த அளவில் வாங்குபவர்களும் உள்ளுர் அரிசி ஆலை, மொத்த வியாபாரிகளிடம் மூட்டையாக வாங்கி விடுகின்றனர்.
இதனால் மொத்த வியாபாரம் மட்டுமே நடந்து வருகிறது. கடைகளில் சில்லரை விற்பனை முற்றிலுமாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில வழக்கத்தை விட சில்லரை வணிகத்தில் அரிசி விற்பனை 70 சதவீதம் குறைந்துள்ளது.பெரும்பாலான வீடுகளில் தற்போது கூடுதலாக அரிசி கையிருப்பு உள்ளது. எனவே அடுத்து சில மாதங்களுக்கு அரிசி சில்லரை வணிகத்தில் இதே நிலையே நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE