உடல்களை புதைக்க எதிர்ப்பு: மும்பை ஐகோர்ட் நிராகரிப்பு| Dinamalar

உடல்களை புதைக்க எதிர்ப்பு: மும்பை ஐகோர்ட் நிராகரிப்பு

Added : மே 22, 2020
Share

மும்பை : கொரோனா நோயாளிகளின் உடல்களை, மும்பையின் பாந்த்ராவில் உள்ள சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

19 உடல்கள்மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளின் சடலங்களை அப்புறப்படுத்த, மும்பையில் உள்ள, 20 இடுகாடுகளும், கல்லறைகளும், பி.எம்.சி., எனப்படும் பிருஹான் மும்பை மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இங்குள்ள பாந்த்ரா கப்ரஸ்தான் பகுதியில் உள்ள சுடுகாட்டில், 19 உடல்களை புதைக்க, முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த பிரதீப் காந்தி என்பவர் உள்ளிட்ட பலரும், மும்பை உயர் நீதிமன்றத்தில், முறையிட்டனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், நோயாளிகளின் சடலங்கள் மூலம், வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, நீதிபதி ஷிண்டே அடங்கிய அமர்வு, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. முழு அதிகாரம்உத்தரவில் தலைமை நீதிபதி கூறியிருப்பதாவது:மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை, சட்டத்திற்கு உட்பட்டது.

நோயாளிகளின் உடல்களை அப்புறப்படுத்த, கல்லறைகள் மற்றும் சுடுகாடுகளை தேர்வு செய்யும் முழு அதிகாரமும், மாநகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. உடல்களை அப்புறப்படுத்தும் போது, உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை, மாநகராட்சியும், இதர அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். நோயாளிகளின் சடலம் மூலம், கொரோனா வைரஸ் பரவும் என எந்த அறிவியல் ஆய்வும் இல்லை. ஆகையால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, உத்தரவில் கூறியுளளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X