அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் பார்வையாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடம், 'கொரோனா ஹாட்ஸ்பாட்' பகுதிகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தும் வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து அவிநாசிக்கு ஏராளமானோர் வந்து செல்ல துவங்கி இருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.எனவே, அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்தில், பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நோயாளிகளின் பார்வையாளர்கள் தங்கும் விடுதி, 'கோவிட் 19' பரவல் தடுப்பு பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து, பொது சுகாதாரப்பிரிவினர் கூறியதாவது:வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அவிநாசிக்கு வருவோர், அவரவர் வீடுகளில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் இருந்து அவிநாசிக்கு வருவோர், அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அந்த வகையில், அவிநாசியில் இருந்து மகாராஷ்டிரா சென்று பணியாற்றி, திரும்பி வந்த நான்கு ஆண்கள், தற்போது தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE