புதுடில்லி : நாட்டில், உள்ளூர் விமான சேவை, நாளை மறுநாள் முதல் துவங்க உள்ளது. இதையடுத்து, விமான ஊழியர்களுக்கு, முக கவசம், கையுறைகள் வழங்கப்பபடுவதுடன், விமானத்தை, 24 மணி நேரத்துக்கு ஒருமுறை, கிருமிநாசினியை பயன்படுத்தி, துாய்மைப்படுத்தவும், விமான சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச், 25ம் தேதி, விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல், உள்ளூர் விமான சேவைகள் துவக்கப்பட உள்ளன. பொதுத்துறை நிறுவனமான, 'ஏர் - இந்தியா' மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், குறைந்த அளவில், விமான சேவைகளை துவக்க உள்ளன.வைரஸ் பரவல் குறையாத நிலையில், விமான பயணியருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானத்தில் ஏற்றுவதற்கு முன், பயணியருடன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.
சமூக விலகலை கடைப்பிடித்து பயணியர் அமர வைக்கப்படுவர். பயணியர் முககவசம், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும்; கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் ஆகியவை உள்ளிட்ட விதிமுறைகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'விமான பைலட்கள் உட்பட ஊழியர்கள் அனைவரும், முக கவசம், கையுறைகள் உட்பட தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்திருப்பர்.விமானங்கள், 24 மணி நேரத்துக்கு ஒரு முறை, கிருமிநாசினியை பயன்படுத்தி, துாய்மைப்படுத்தப்படும்' என, விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE