திருப்பூர்:ஊரடங்கால், காலணி தைக்கும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.'சார்... ஷூ பாலீஷ்' என்று அழைப்பவரை, பாதசாரிகள் பலரும், ஏறுகொண்டு கூட பார்க்காது, அலட்சியமாக செல்வதுண்டு. இருப்பினும், அவரது அழைப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும்.
பஸ் ஸ்டாண்ட் உட்பட சாலையோரங்களில், போக்குவரத்துக்கு இடையூறின்றி, காலணி தைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் பலர். திடீரென்று செருப்பு அறுந்து விடும்போதுதான், இவர்களைப் பொதுமக்கள் தேடுவதுண்டு. பல நேரங்களில், இவர்கள் கேட்கும் சொற்பக்காசைக் கூட, பேரம் பேசிப் பலரும் வழங்குவதுண்டு. சுண்டியெறியும் சில்லரைக்காசுகள் தான், காலணி தைப்போருக்கு வாழ்வாதாரம். தினமும் 200 ரூபாய் சம்பாதித்தால் அதுவே அதிகம். ஊரடங்கு காலத்தில், இவர்களது வாழ்வாதாரம் முழுமையாக பறிபோனது.காலணி தைப்போர் கூறியதாவது:எங்களில் பலர், தம்பதியராகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்துதான், இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். பதப்படுத்தும் தோல்களை வாங்கி காலணிகளைத் தைப்பதற்குப் பயன்படுத்துவோம். கயிறு உள்ளிட்டவற்றையும் தயாரித்து வருகிறோம். பலர், வாரச்சந்தைகள், தினசரிச் சந்தைகள் என மக்கள் கூடும் இடங்களை நம்பி, இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வேறு தொழில் எங்களுக்குத் தெரியாது.ரேஷன் கடைகளில் வழங்கும் உணவுப்பொருட்களும், அரசு வழங்கிய நிவாரணத்தையும் கொண்டுதான் சாப்பிட்டு வருகிறோம்.
இது சில நாட்களுக்குக் கூட போதவில்லை. காலணி தைக்கும் நாங்கள், எங்கள் குடும்பத்தின் வயிற்றை 'தைத்துவிட்டோம்'. ஊர்ப்பெரியவர்களை நாடி உதவி கேட்டோ, கடன் பெற்றோ குடும்பத்தை நடத்தி வருகிறோம். தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை எங்களுக்குக் கிடைக்கவில்லை.காலணி தைப்பவர்களுக்கு, நல வாரியம் இருந்தாலும், சாலையோரம் காலணி தைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பலரும், இதில் உறுப்பினர்களாகவில்லை. எங்கள் மீது, அரசு கருணை காட்ட வேண்டும்.இவ்வாறு, காலணி தைப்போர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE