கொச்சி : ஜோர்டான் நாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவித்த, மலையாள நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், இரண்டு மாதங்களுக்குப் பின், சிறப்பு விமானம் மூலம், நேற்று பத்திரமாக நாடு திரும்பினர்.
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ், 37. தமிழில், மொழி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடிப்பதற்காக, அரபு நாடான ஜோர்டானுக்கு, மார்ச்சில் சென்றார். இயக்குனர், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட, 58 பேர் அடங்கிய படக்குழுவினர், ஜோர்டானில் உள்ள, வடி ரம் பாலைவனத்தில் விறு விறுப்பாக படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச், 16 லிருந்து, ஜோர்டானில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இந்நிலையில், பாலைவனத்தில் சிக்கி தவிப்பதாக, பிரித்விராஜ் சமூக வலைதளத்தில் உருக்கமாக கருத்து பதிவிட்டிருந்தார். கேரளாவில் உள்ள அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், ஆடு ஜீவிதம் படக்குழுவினரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான சிறப்பு விமானத்தில், பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், 58 பேர், நேற்று பத்திரமாக கொச்சி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்துக்கு வந்த பிரித்விராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
கேரளாவில், படக்குழுவினர் அனைவரும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக, ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கித் தவித்த தங்களை பத்திரமாக மீட்க உதவிய மத்திய அரசுக்கு, பிரித்விராஜும், படக்குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE