மேட்டுப்பாளையம்:"காரமடை பேரூராட்சி குடிநீர் திட்டத்துக்கு, பவானி ஆற்றின் மையப்பகுதியில், தண்ணீர் உறிஞ்சி எடுக்கும், கிணறு அமைத்துள்ளதால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்," என, பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.காரமடை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றில் கிணறு அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
கோடைகாலத்தில் ஆற்றில் தண்ணீர் குறைவாக வரும்போது, கிணறு அருகே தண்ணீர் வருவதில்லை. இதனால் காரமடை பேரூராட்சியில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் குமார் கூறியதாவது: காரமடை பேரூராட்சிக்கு, பவானி ஆற்றிலிருந்து, 15 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. கோடைகாலத்தில் ஆற்றில் அமைந்துள்ள கிணற்றுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால், 50 லட்சம் ரூபாயில் குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
பவானி ஆற்றின் மையப்பகுதியில், மூன்றரை மீட்டர் ஆழத்திலும், அகலத்திலும் கிணறு தோண்டப்பட்டுள்ளது. அதில் மின்மோட்டார் அமைத்து, அங்கிருந்து ஆற்றில், 210 மீட்டருக்கு அமைத்துள்ள குழாய்கள் வழியாக, பழைய கிணற்றுக்கு தண்ணீர் பம்ப்பிங் செய்யப்படுகிறது.தினமும் மொத்தம், 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. இதற்காக, 25 கி.மீ.,க்கு மெயின் குழாய்களும், 45 கி.மீ.,க்கு பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன.தற்போது வெள்ளோட்டம் முறையில், குடிநீர் 'பம்ப்' செய்யப்படுகிறது. அனைத்து பணிகளும் முடிந்த பின்பு, பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனால் குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE