துாய்மை பணியாளர்களுக்கு உக்கடத்தில் வீடு கட்ட திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு உக்கடத்தில் வீடு கட்ட திட்டம்

Added : மே 23, 2020
Share

கோவை:உக்கடம் மேம்பாலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், துாய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சு நடத்தினர்.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது.ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோர், செல்வபுரம் பைபாஸில், மீன் மார்க்கெட் முன் இறங்கும் வகையில் ஓடுதளம் அமைக்க, துாய்மை பணியாளர் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டியுள்ளது.அனைவருக்கும் மாற்று வீடு வழங்கி, கட்டடங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் குமார், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் சார்பில், 20 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அப்போது, '492 நிரந்தர குடியிருப்பில் வசிப்போருக்கு, உக்கடத்தில் பாலம் கட்டியது போக, மீதமுள்ள இடத்தில், குடிசை மாற்று வாரியம் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்.பயனாளிகளின் புகைப்படத்துடன் கூடிய உத்தரவு அனைவருக்கும் வழங்கப்படும். மற்ற, 245 வீடுகளில் வசிப்போர், வெள்ளலுார், உக்கடம் கழிவு நீர் பண்ணை, கீரணத்தம், மலுமிச்சம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், மாற்று வீடு பெற்றுக் கொள்ளலாம்.அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிப்பது வரை, வாடகை வீட்டில் வசிக்க வசதி இல்லாதவர்களுக்கு, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், இடம் ஒதுக்கிக் கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தொழிலாளர்களுடன் பேசி விட்டுச் சொல்வதாக, பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X