கோவை:காற்றடித்தால் கிளை முறிந்து விழும் 'மே பிளவர்' மரங்களால், வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தும், வாகனங்களுக்கு சேதமும் ஏற்படுகின்றன.கோவையில் உள்ள பெரும்பாலான சாலைகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் மே பிளவர் மரங்கள் உள்ளன. சிறிய காற்று அடித்தால் கூட, இதன் கிளைகள் முறிந்து விழுந்து விடும். திடீரென பட்டுப்போய் விடும்.கோவையில் பல இடங்களில், இந்த மரங்கள் பட்டுபோன நிலையில் உள்ளன. காற்று, மழை நேரத்தில், இந்த மரங்கள் முறிந்து விழுவதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
நேற்று முன் தினம், புலியகுளம் ரோடு லட்சுமி மில்ஸ் அருகில், ரோட்டின் ஓரம் இருந்த மே பிளவர் மரத்தின் கிளை முறிந்து விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலியானது குறிப்பிடத்தக்கது.அதனால், சாலை ஓரங்களில் பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதோடு, சாலையில் உள்புறம் நீண்டு வளரும் கிளைகளை, நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்ற வேண்டும்.
சாலை ஓரங்களில் எந்த மாதிரியான மரங்களை வளர்த்தால், பாதுகாப்பானது என்பது குறித்து, கோவை வனமரபு மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியாரிடம் கேட்ட போது, ''இடம் எங்கு கிடைத்தாலும் அங்கு மரங்களை வளர்க்க வேண்டும். சாலை ஓரங்களில் நம் நாட்டு மரபு சார்ந்த மரங்களை வளர்ப்பது நல்லது. அவை நீண்ட காலம் நிலைத்து வளரக்கூடியவை. குறிப்பாக, பூவரசு, வேம்பு, கடம்பு, புளியன், புங்கன், மகிழம், குமிழ், மற்றும் வாகை உள்ளிட்ட மரங்கள், திடமான நீண்ட ஆயுள் கொண்டவை. மிக ஆழமாக வேர் பிடித்து, உயரமாக வளரும் தன்மை, இந்த மரங்களுக்கு உண்டு,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE