செஞ்சி: ஜல்லி பெயர்ந்து கந்தலாகிப் போன செஞ்சிக்கோட்டை பிரதான சாலையை புதுப்பிக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாக செஞ்சி கோட்டை உள்ளது. செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலை சாலையில் இருந்து ராஜகிரி கோட்டை நுழைவு வாயில், ஆஞ்சநேயர் கோவில், வெங்கட்ரமணர் கோவில், புதுச்சேரி வாயில் செல்லும் தார் சாலை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.அதன் பிறகு, இந்த சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமானது. புத்தாண்டு, காணும் பொங்கல் அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.புத்தாண்டின் போது ஆஞ்சநேயர் கோவில் விழாக் குழுவினர் சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக மண் கொட்டி சரி செய்கின்றனர். காணும் பொங்கலின் போது இந்திய தொல்லியல் துறையினர் தற்காலிகமாக சாலையை சரி செய்கின்றனர். அடுத்து சில நாட்களிலேயே மீண்டும் சாலை குண்டும் குழியுமாக மாறி விடுகிறது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை கடந்த முறை பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட புராதன நகர அபிவிருத்தி திட்ட நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலையை அமைத்தனர்.அதன்பிறகு பேரூராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வில்லை. இதனால், சாலை புதுப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி கோட்டையைக் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்திய அரசின் மீதும், தொல்லியல் துறையின் மீதும் அவர்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும் வகையில், சாலை ஓரங்களில் பூங்காக்களை அமைத்து. நடுவில் மேம்படுத்தப்பட்ட தரமான தார் சாலை அமைக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE