ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு

Added : மே 23, 2020
Share

விழுப்புரம்: கொரோனா ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டதால், விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே, பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே உள்ள மிகப்பெரிய குளம் நகரின் மையப் பகுதியின் பெரும் நீர் ஆதாரமாக இருந்து வந்தது. இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும்போது அருகில் உள்ள வீடுகளின் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் நீர் ஊற்றுகள் அதிகமாக இருந்தன.இங்கு குறைந்த அளவு ஆழத்தில் போர்வெல் அமைத்தாலே அதிக தண்ணீர் கிடைக்கும். ஆனால், இக்கோவில் குளம் கடந்த பல ஆண்டுகளாக குப்பை மற்றும் கட்டட இடிபாடு கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது. மிகப்பெரிய குளமாக இருந்தது, தற்போது குட்டையைவிட சிறிய அளவில் காணப்பட்டது.அதிலும், புதர்கள் மண்டி குளம் இருக்கிறதா என்பது தெரியாத அளவில் காணப்பட்டது. இதே நிலை நீடித்தால், நாளடைவில் இங்கு குளம் இருந்த தடம் தெரியாமல் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டது. குளம் மறைந்து வருவதால், மழைநீர் தேங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது.இதனால், இக்குளத்தை துார்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நுாற்றாண்டு விழா காணும் விழுப்புரம் நகராட்சிக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த நிதியில், 1.50 கோடி ரூபாயில், ஆதிவாலீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குளம் துார்வாரும் பணிகள் துவங்கியது. இதற்காக, பொக்லைன் மூலம் குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் மற்றும் மணலை அகற்றினர்.இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இப்பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், குளம் சீரமைக்கும் பணிகள் தற்போது மீண்டு துவங்கியுள்ளது.இதனால், விரைவில் ஆதிவாலீஸ்வரர் கோவில் குளம் புதுப்பொலிவுபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X