இந்தியா

குழப்பம்! சிவப்பு மண்டலமாகிறதா புதுச்சேரி?: முதல்வர் நாராயணசாமி மறுப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement
 குழப்பம்! சிவப்பு மண்டலமாகிறதா புதுச்சேரி?: முதல்வர் நாராயணசாமி மறுப்பு

புதுச்சேரி, மே 23-கொரோனா தொற்று அதிகரிப்பால், புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறுகிறது என அதிகாரிகள் கூறியதற்கு, முதல்வர் நாராயணசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமத்தில் அமைந்துள்ள கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், புதுச்சேரியில் வசிப்பவர்கள் 9 பேர்; குவைத், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 5 பேர்.இவர்களை தவிர, காரைக்காலில் ஒருவரும், மாகியில் இரண்டு பேரும் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய யூனியன் பிரதேசத்தின் 3 பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதியன்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பிய பெரியக்காலாப்பட்டை சேர்ந்த 43 வயது பெண்ணை அவரது வீட்டிலேயே சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவருக்கு சளி, ஜூரம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.இருந்தபோதும், அந்த பெண் மருத்துவமனையில் இருக்காமல் வீட்டுக்கு சென்று விட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. பின், கோவிட் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் வசிக்கும் பகுதியை மூடி போலீசார் சீல் வைத்துள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும், புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் சென்னை பாண்டி பஜாரில் வசிக்கிறார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறையினருக்கு தமிழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் சென்னையில் வசித்தாலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி கொரோனா பாதிப்பு பட்டியலில் அந்த பெண் சேர்க்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி பகுதியில் கொரோனா பாதிப்பு 16 ஆக உயர்ந்துள்ளது.

இத்துடன், காரைக்காலில் ஒருவர், மாகியில் இருவரையும் சேர்த்தால் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டனர்; ஒருவர் இறந்து விட்டார்.

இதுபோன்ற சூழ்நிலையில், 'மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் ஒரு பகுதியில் இருந்தால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்; புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறுகிறது' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது, 'புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறுகிறது என்பது தவறான தகவல். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலமாக பிரிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று மிகப் பெரியளவில் இல்லை; ஒருவர், இருவருக்குதான் உள்ளது' என்றார்.அமைச்சர் எச்சரிக்கைசுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறும்போது, 'புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றால், எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X